Published : 06 Apr 2020 11:54 PM
Last Updated : 06 Apr 2020 11:54 PM

ஊரடங்கு காலத்தில் கர்ப்பிணிகளுக்கு உதவும் இளைஞர்; மருத்துவ சிகிச்சைக்கு கார் உதவி: 13 நாளில் 43 பேருக்கு உதவி

ஊரடங்கு காலத்தில் நிறைமாத கர்ப்பிணிப் பெண்களுக்கு மருத்துவ உதவி கிடைக்க தனது கார் மூலம் இலவசமாக அழைத்துச் செல்லும் பணியை சென்னை இளைஞர் ஒருவர் செய்து வருகிறார்.

சென்னையில் கரோனா தொற்று காரணமாக பொதுமக்கள் கூடுவதைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வெளியில் சுற்றுபவர்கள் வாகனம் பறிமுதல் செய்யப்படுகிறது. வழக்கும் பதிவு செய்யப்படுகிறது.

இது தவிர பொதுப்போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் அதிகம் பாதிக்கப்படுவது, கர்ப்பிணிகள், வயதானவர்களே. கால் டாக்ஸி, ஆட்டோ சேவை அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கும் காரணத்தால் இவர்கள் வெளியில் செல்வது சில நேரம் உயிருக்கே ஆபத்தாக முடியும்.

கர்ப்பிணிப் பெண்கள் செக்கப்புக்குச் செல்வதும், பிரசவத்துக்காக மருத்துவமனைக்குச் செல்வதும் தற்போது சிரமமான காரியமாக உள்ளது. இந்த நேரத்தில் கர்ப்பிணிகள் பிரச்சினையைக் கண்கூடாகப் பார்த்த சென்னை இளைஞர் ஒருவர் அவர்களுக்கு இலவச சேவை செய்ய முன் வந்தார்.

அவர் பெயர் லியோ ஆகாஷ் ராஜ். ஆவடியில் வசிக்கும் இவர் தாம்பரத்தில் பிரிட்டி லில் ஹாட்ஸ் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் ஏதோ இன்று இப்பணியில் ஈடுபடுபவர் அல்ல. எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இலவச சேவை செய்து வரும் நல்ல மனம் கொண்டவர்.

ஊரடங்கு காலத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கு மருத்துவ உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்க தன்னுடைய காரையும் நண்பர் பென்னி என்பவரது காரையும் கர்ப்பிணிகளுக்காக இலவசப் போக்குவரத்துச் சேவைக்கு சென்னை முழுவதும் பயன்படுத்தி வருகிறார்.

9-வது மாத நிறைமாத கர்ப்பிணிப் பெண்களுக்கு மட்டுமே இந்த உதவியை லியோ ஆகாஷ் ராஜ் செய்து வருகிறார். சமூக வலைதளங்களில், முகநூலில் தனது நிறுவனத்தின் பெயர், செல்போன் எண்களைக் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட கடந்த 13 நாட்களில் 43 கர்ப்பிணிப் பெண்கள் உதவி கேட்டு அழைக்க, காரை எடுத்துச் சென்று அவர்களுக்கு உதவி செய்துள்ளார். இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் 23 கர்ப்பிணிகள் மருத்துவமனையில் சரியான நேரத்தில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவர்களுக்கு நல்ல முறையில் குழந்தைகள் பிறந்தனர்.

ஆம்புலன்ஸ் வாகனம் போல உதவும் லியோ ஆகாஷ் ராஜின் சேவைக்குப் பாராட்டு கிடைக்கிறது. குழந்தை பிறந்த பின் பலர் நன்றி தெரிவிக்கின்றனர். என்ன குழந்தை பிறந்துள்ளது என்பதை செல்போனில் பேசி நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தவர்கள் அதிகம்.

இப்போதும் தினமும் குறைந்தது 30 கர்ப்பிணிப் பெண்களிடமிருந்து அழைப்பு வருகிறது. இதனால் இலவச சேவைக்கு 2 கார்களையும், பயன்படுத்துவதோடு தனியார் நிறுவன ஆட்டோவையும் பயன்படுத்தி சேவையை விரிவுபடுத்தியுள்ளார். கரோனாவால் ஊரடங்கு நேரத்தில் எப்படி மருத்துவமனைக்கு செல்லப்போகிறோம் என்று பயந்து தவித்த எங்களைக் காத்த ரட்சகர் லியோ என்று குழந்தை பெற்ற தாய்மார்கள் பாராட்டியுள்ளனர்.

தற்போது சென்னையில் கிடைத்த வரவேற்பு, பாதிக்கப்பட்டவர்கள் படும் கஷ்டத்தைப் பார்த்து இலவசப் போக்குவரத்துச் சேவையை சேலத்திலும் தொடங்கியுள்ளார் லியோ. அரசின் ஆம்புலன்ஸ் அனைத்து இடங்களுக்கும் வர முடியாது. அதுபோன்ற நேரத்தில் தான் மட்டுமல்ல தன்னைப்போன்ற நல்ல எண்ணமுள்ள ஆட்டோ ஓட்டுநர்கள், நண்பர்களை இச்சேவைக்குப் பயன்படுத்தும் லியோ ஆகாஷ் ராஜ் சிறந்த மனிதர்தான்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x