

கரோனா தொற்று பாசிட்டிவ் என அறியப்பட்டும்கூட சம்பந்தப்பட்ட நோயாளிகளிடம் அறிகுறிகள் இல்லாதது குறித்து நச்சுயிரியல் வல்லுநர்களை அரசு அணுகியுள்ள நிலையில் அவர்களையும், மருத்துவர்களையும் கொண்டு உயர்மட்ட ஆய்வுக்குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் நிஜாமுதீன் கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் நிஜாமுதீன் இன்று வெளியிட்ட அறிக்கை:
“ டெல்லியில் தப்லீக் ஜமாஅத் கூட்டத்தில் பங்கேற்ற கரோனா பாசிட்டிவ் வந்த 80 சதவீதத்துக்கும் அதிகமானவர்களை பரிசோதித்துப் பார்த்ததில் பாசிட்டிவ் (நேர்மறை) என பரிசோதனை முடிவு அறிவிக்கப்பட்டும் கூட ஏன் அதற்கான அறிகுறிகள் அவர்களிடத்தில் காணப்படவில்லை என்ற கேள்வியை தமிழக சுகாதாரத் துறை நச்சுயிரியல் ( வைரஸ் ) வல்லுநர்களைக் கேட்டு அதன் தாக்கத்தையும் நுண்ணுயிர்களின் தீவிரத்தன்மையையும் ஆய்வு செய்யுமாறு தமிழக சுகாதாரத் துறை கேட்டுக் கொண்டுள்ளதாக அறிய முடிகிறது .
தப்லீக் ஜமாஅத் கூட்டத்தில் கலந்துகொண்ட நபர்களை கிட்டத்தட்ட எல்லோரையும் தனிமைப்படுத்தி விட்டோம். பாசிட்டிவ் என அறிவிக்கப்பட்ட அவர்களிடத்தில் அதற்கான தாக்கம் அல்லது அறிகுறிகள் தென்படாதது ஏன் எனத் தெரியவில்லை” என சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரும் கேள்வி எழுப்பியுள்ளார். அமைச்சரும் ஒரு மருத்துவர் என்பது நாம் இங்கு கவனிக்கத்தக்கது.
அப்போலோ மருத்துவமனை தொற்று நோய்த்துறை மருத்துவ ஆலோசகர் டாக்டர்வ வி,ராமசுப்பிரமணியன் கூறுகையில், “அனைத்து வைரஸ் கிருமிகளும் தொடர்ச்சியின் வரிசையில் அதன் வீரியத் தன்மையில் மாற்றம் நிகழும், குறையவும் செய்யும், அதிகரிக்கவும் செய்யும்" என்கிறார்.
இச்செய்திகள் தமிழ் அல்லாத பிறமொழி பத்திரிக்கைகளில் மட்டுமே வந்துள்ளது. இது குறித்து நச்சுயிரியல் (வைரஸ் )ஆய்வு வல்லுநர்களையும் மருத்துவ வல்லுநர்களையும் கொண்ட உயர்மட்ட ஆய்வுக்குழுவை தமிழக அரசு உடனே அமைத்து ஆய்வு முடிவைப் பெற்று நேர்மறை (பாசிட்டிவ் ) வந்தவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றவும் அந்த ஆராய்ச்சியின் முடிவைக் கொண்டு இந்திய அளவில் வழிகாட்டவும் வேண்டுகிறேன்”.
இவ்வாறு நிஜாமுதீன் தெரிவித்துள்ளார்.