Published : 06 Apr 2020 09:08 PM
Last Updated : 06 Apr 2020 09:08 PM

நீளும் கரோனா துயரம்: கிராமங்கள் எப்படி இருக்கின்றன?

தனது குடும்பத்தினருடன் சிவக்குமார்

கிராமங்கள் நாட்டின் முதுகெலும்பு என்றார் தேசப்பிதா காந்தி. இது வெறும் மேற்கோளோ, சம்பிரதாய வார்த்தையோ அல்ல. தற்சார்புடன் தன்னுடன் நகரங்களையும் சேர்த்து வாழ வைப்பவை கிராமங்கள். மனிதர்கள் வசிக்கும் பகுதிகள் அனைத்தையும் தொட்டுச் சென்ற கரோனா, கிராமங்களில் என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது?

விவசாயத்தையும் உடல் உழைப்பைம் மட்டுமே மூலதனமாகக் கொண்டிருக்கும் கிராம மக்கள், கரோனா குறித்த விழிப்புணர்வோடு உள்ளார்களா?

இதுகுறித்து திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெவ்வேறு கிராமத்தினர் இடையே பேசினேன்.

முளையாம்பூண்டி கிராமத்தின் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வரசி பேசும்போது, ''எங்கள் ஊராட்சியில் உள்ள 12 கிராமங்களிலும் 4 செயல்முறைகளை மேற்கொண்டோம். முதலில் கரோனா நோய் குறித்தும் அதன் விளைவுகள் குறித்தும் தண்டோரா போட்டு ஊர் மக்களுக்குத் தெரிவித்துவிட்டோம்.

இரண்டாவதாக ஊர்கள் முழுவதும் கிருமிநாசினிகள் தெளித்தோம். மூன்றாவதாக கரோனா எப்படிப் பரவும், அதில் இருந்து எப்படி நம்மைத் தற்காத்துக்கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய நோட்டீஸை அனைத்து கிராம மக்களுக்கும் விநியோகித்துள்ளோம். கடைசியாக மீண்டும் ஒருமுறை கிருமிநாசினி தெளித்திருக்கிறோம்.

இங்குள்ள கிராமப்புறங்களில் விழிப்புணர்வு அதிக அளவில் இருக்கிறது. அனைவரும் தொலைக்காட்சி பார்க்கின்றனர். செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்கின்றனர். 70 முதல் 80 சதவீத மக்கள் விழிப்புணர்வுடனே உள்ளனர்.

நிறையப் பேர் வீடுகளுக்கு மஞ்சள், சாண நீரைத் தெளிக்கின்றனர். வேப்பிலையைச் செருகி வைத்திருக்கின்றனர். எனினும் எல்லோரும் ஊரடங்கை முறையாகப் பின்பற்றுவதில்லை.

கரோனா அச்சம் காரணமாக கேரளா, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊர் திரும்பி இருக்கின்றனர். கிட்டத்தட்ட வீட்டுக்கு ஒரு நபர் வெளியில் இருந்து வந்தவராக உள்ளார். அவர்களால் மற்றவர்களுக்கும் கரோனா அச்சுறுத்தல் உள்ளது. எனினும் மாமன், மச்சான், அண்ணன், தம்பி உறவுகளுக்கிடையே எதையும் சொல்ல முடிவதில்லை'' என்கிறார் செல்வரசி.

பட்டியலினத்தவரான சிவக்குமார் (சரவணக்கவுண்டன் வலசு) தனது வாழ்வியல் சூழலைப் பகிர்கிறார். ''சொந்தமா தறி வெச்சு ஓட்டறேனுங்க, ஊடு நூல் வராததால 10 நாளா தறி சும்மா கெடக்குது. ரெண்டு பொம்பளப் புள்ளைங்க. வெவசாய வேலைகளும் முடங்கிருச்சு, 100 நாள் வேலயும் இல்ல. சாப்பாட்டுக்கே சிரமத்துலதான் இருக்கோம். அரசு குடுத்த 1000 ரூவா, எந்தக் கோட்டுக்குப் பத்தும்னு தெரில. ஒவ்வொரு குடும்பத்துலயும் கொறஞ்சது 6 பேர் இருக்கறோம். நிவாரணம் பத்தாதுதான், ஒருபக்கம் அதாவது கெடச்சுதேன்னு நிம்மதியா இருக்கு.

நாங்க கடை, கண்ணிக்குப் போய்ட்டு வந்தா, கை, காலை நல்லா சோப்பு போட்டு கழுவிட்டு, குளிச்சிட்டுதான் உள்ளே வருவோம். ஓரளவுக்கு விழிப்புணர்வோடதான் எல்லாரும் இருக்கோம். வயித்துப்பாட்டுக்குத்தான் பிரச்சினையா இருக்கு, அரசுதான் பாத்து எதையாவது செய்யணும்'' என்கிறார் சிவக்குமார்.

ஊராட்சி மன்றத் தலைவர் செல்வரசி, சமூக ஆர்வலர் சிவமுத்து

எனினும் கிராமத்தினர் முறையாக கரோனா விழிப்புணர்வைப் பின்பற்ற முடிவதில்லை என்கிறார் கருப்பன்வலசு சமூக ஆர்வலரான சிவமுத்து. அவர் கூறும்போது, ''வீட்டுக்குள்ளேயே இருந்து பழகிவிட்ட நகர்ப்புற வாழ்க்கைக்கு கிராமத்தினர் இன்னும் பழக்கப்படவில்லை.

மாடு மேய்க்க, ஆடுகளை மேய்ச்சலுக்கு விட, பால் ஊற்ற, மளிகைகள் வாங்க என வீட்டில் ஒருவராவது வெளியில் வரவேண்டி இருக்கிறது. பொழுதைக் கொல்ல சிலர் வெளியே செல்வதைப் பார்க்கிறேன்.

இங்கு முகக் கவசங்கள் அதிகம் கிடைப்பதில்லை. வெளியே வருபவர்களில் பெரும்பாலானோர் தலைக்குக் கட்டும் துண்டு, கர்ச்சீப்பை முகத்தில் கட்டிக்கொள்கின்றனர். வடக்கு வலசு, முளையாம்பூண்டி கிராமங்களில் அந்நியர்கள் யாரும் நுழையக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது. கூட்டமாக வாழ்ந்து பழகிய சமூகத்தால், பத்துக்கு பத்து அறைக்குள் இருக்க முடியவில்லை. விழிப்புணர்வுடன் இருந்தாலும் நடைமுறையில் அதை சாத்தியப்படுத்த கிராமங்கள் தவறிவிடுகின்றன'' என்றார் சிவமுத்து.

கிராமங்களில் 3 ரூபாய் மாஸ்குகள் ரூ.50 வரையில் விற்கப்படுகின்றன. என்95 மாஸ்க் என்றாலே என்னவென்று தெரியவில்லை. இங்குள்ள சிறு நகரங்களில் கூட சானிடைசர் கிடைப்பதில்லை. குளிக்கும் சோப்புகள், துவைக்கும் சோப்புகளைக் கொண்டு கிராம மக்கள் கைகழுவிக் கொள்கின்றனர். சிலர் டெட்டால், ஃபினாயிலை வாங்கி வைத்துப் பயன்படுத்துகின்றனர்.

எனினும் முன்னெச்சரிக்கையுடன் தங்களது கிராமத்தில் அந்நியர் நுழையக் கட்டுப்பாடு விதித்திருப்பதாய்ச் சொல்கிறார் பெரமியம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் மாயகிருஷ்ணன்.

அவர் கூறும்போது, ''கிராம சாலையையே முழுவதுமாக மறித்துவிட்டோம். வீட்டுக்கு முன்னால் தினமும் கிருமிநாசினி தெளிக்கிறோம். கிராமத்தின் தலைவாசலில் கிருமிநாசினி வைத்திருக்கிறோம். ஊருக்கு வரும் நபர்கள் கை கழுவிவிட்டுத்தான் வரவேண்டும். அந்நியர்கள் நுழைய முடியாதபடி இரண்டு நபர்கள் காவலுக்கு இருக்கின்றனர். இரு சக்கர வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு.

கரோனா வைரஸின் தீவிரம் குறித்துச் சொன்னால் மக்கள் புரிந்துகொள்கிறார்கள். கட்டுப்பாடுகளைப் பின்பற்ற முயல்கிறார்கள். தொலைக்காட்சியைத் தவிர எங்களுக்கு வேறு பொழுதுபோக்கு இல்லை. செய்திகளில் கரோனா குறித்து தொடர்ந்து பேசப்படுவதால் வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

வயதானவர்கள் சிலர் மட்டும், இனி நான் உயிரோட இருந்து என்ன பண்ணப் போறேன் என்று கேட்கும்போது இளையவர்கள் சொல்லிப் புரியவைக்கின்றனர். தொழில் காரணமாக ஈரோட்டில் இருந்து வந்தவர் ஊரில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார். இதுகுறித்த தகவலை சுகாதாரத் துறையிடம் தெரிவித்ததே ஊர் ஆட்கள்தான். அவரிடம் பேசவே மக்கள் பயப்படுகின்றனர்.

எங்களின் (தாழ்த்தப்பட்ட) சமூகத்தினர் இதுநாள் வரை எல்லாவற்றையும் எப்படியோ சமாளித்துவிட்டனர். 21 நாட்கள் தாண்டியும் ஊரடங்கு அமலில் இருந்தால் கண்டிப்பாக யாராலும் சமாளிக்க முடியாது'' என்கிறார் மாயகிருஷ்ணன்.

''கிராம மக்கள் விழிப்புணர்வுடன்தான் இருக்கின்றனர். ஆனால் வெளியில் இருந்து வந்தவர்கள் அதே அக்கறையுடன் இருக்கிறார்களா என்பது கேள்விக்குறிதான்.

வீட்டுக்கு வருபவர்களை எப்படி வராதீர்கள் என்று சொல்ல முடியும், வெளியூரில் இருந்து வந்தவர்களைத்தான் அரசு தனிமைப்படுத்தி வருகிறது. ஆனால் அவர்கள் யாருமே தனியாக இருப்பதில்லை. அவர்கள் வீட்டில் நோட்டீஸ் மட்டுமே நகராமல் இருக்கிறது.

காலனிகளில் மக்கள் கட்டுப்பாட்டுடன் இருக்கிறார்கள். ஆனால் படித்த, வேலை பார்க்கும் நபர்கள் விதிமுறைகளை மதிக்கிறார்களா என்பது கேள்விக்குறிதான். பக்கத்துத் தோட்டத்தில் சென்னையில் இருந்து வந்திருக்கிறார்கள். அதற்குப் பக்கத்துத் தோட்டத்தில் வெளிநாட்டில் இருந்து வந்திருக்கிறார்கள். வெளியூர்களில் இருந்து வந்தவர்களை நினைத்து உள்ளூரில் இருப்பவர்களுக்கு பயமாக இருக்கிறது.

இவையெல்லாமும் கிராமங்கள் பாதுகாப்பாக இருக்கின்றனவா என்ற அச்சத்தை எனக்குள் ஏற்படுத்துகிறது. பொருளாதாரத்தைவிட கரோனா பாதிப்பில் இருந்து தப்பிப்பதுதான் முக்கியம்'' என்கிறார் வடக்கு வலசு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜேந்திரன்.

ஆசிரியர் மாயகிருஷ்ணன், இல்லத்தரசி வசந்தி

திருநெல்வேலி, கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த வெங்கட்நாராயணன் கூறும்போது, ''நாங்கள் ஊரடங்கு உத்தரவை முழுமையாகக் கடைப்பிடிக்கறோம். ஆனால், அவசரத்துக்கு ரோட்டுப் பக்கம் சென்றால், வண்டிகள் தொடர்ந்து போயிட்டே இருக்கு. ஒருசாரர் முழுசா ஊரடங்கைக் கடைப்பிடிக்க, இன்னொரு பக்கம் எந்தக் கவலையும் இல்லாம, இயல்பா இருக்காங்க, இது எங்க போய் முடியும்னு தெரியல'' என்கிறார்.

மதுரை, முத்துநகரைச் சேர்ந்த வசந்தி, விவசாயக் கூலியாக இருப்பவர். வேலை இல்லாத போது நூறு நாள் வேலைக்குச் செல்கிறார். அவர் பேசும்போது, ''பையன் பிஸ்கட் கம்பெனில வேலை பார்க்கறான், பொண்ணு 11-வது படிக்கறா. நிலைமைய பார்க்கும்போது பயமா இருக்குங்க. டவுனுக்கு எல்லாம் போறதில்லை. 10 நாளா வேலைக்கும் போகலை.

நகரங்கள்லதான் நிறைய பேருக்கு கரோனா இருக்குன்னு சொல்றாங்க. இங்க கிராமத்துல பெருசா பிரச்சினை இல்லீங்க. ஆனாலும் பணத்தைவிட உசுருதானே முக்கியம், அதான் அடுத்த வேளைக்கு சோறு பத்தலைன்னாலும் அமைதியா வீட்டுல இருக்கோம்'' என்றார் வசந்தி.

- க.சே.ரமணி பிரபா தேவி | தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x