தேனி உழவர் சந்தையில் விற்பனை நிறுத்தம்; நடமாடும் கடைகளாக மாற்றம்- சமூக விலகலை உறுதிப்படுத்த நடவடிக்கை

தேனி உழவர் சந்தையில் விற்பனை நிறுத்தம்; நடமாடும் கடைகளாக மாற்றம்- சமூக விலகலை உறுதிப்படுத்த நடவடிக்கை
Updated on
1 min read

கரோனா தீவிர கண்காணிப்பு பகுதியில் தேனி உழவர் சந்தை அமைந்துள்ளதால் காய்கறி விற்பனை நிறுத்தப்பட்டு நடமாடும் வாகனங்களில் விற்பனை துவங்கியது.

தேனி மாவட்டத்தில் இதுவரை 23 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் இரண்டு பேர் தேனி அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். இப்பகுதி குறுகலாக, அதிக குடியிருப்புகளைக் கொண்டதாகும்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க இப்பகுதியில் உள்ளவர்கள் வெளியே வர தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்பகுதியில் இருந்து 5கிமீ தூரம் தீவிர கண்காணிப்புப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பெரியகுளம் ரோடு, மதுரைரோடு, சமதர்மபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள கடைகள் இன்று காலை 8 மணி முதல் அடைக்கப்பட்டன. பொதுமக்கள் வெளியில் வரவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதனால் புதிய பேருந்து நிலையத்தில் செயல்பட்ட உழவர்சந்தை விற்பனையும் நிறுத்தப்பட்டுள்ளது. தோட்டக்கலைத்துறை சார்பில் 8 சிறிய வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை நேற்று முதல் துவங்கியது.

நகரில் உள்ள முக்கிய கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளதால் தேனி வெறிச்சோடி காணப்படுகிறது. சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில் இந்த கண்காணிப்பு 28நாட்களுக்கு இருக்கும் என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in