

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தொகுதியைச் சேர்ந்த பல லட்சம் பேருக்கு அதிமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்பியுமான செந்தில்நாதன் தனது சொந்த செலவில் 10 வகையான காய்கறிகளை வழங்கி வருகிறார்.
கரோனா வைரஸ் தொற்றை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
கூலித் தொழிலாளர்களின் குடும்பங்கள் உணவிற்காக சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அதிமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்பியுமான செந்தில்நாதன் தனது சொந்த செலவில் காரைக்குடி தொகுதியில் ஒரு லட்சம் குடும்பங்களுக்கு 10 வகையான காய்கறிகளை வழங்கி வருகிறார்.
இதில் தக்காளி, பெரிய வெங்காயம், கத்தரிக்காய், முட்டைகோஸ் தலா அரை கிலோ, உருளைகிழங்கு, சின்னவெங்காயம், முருங்கைக்காய், மாங்காய், பீட்ரூட் தலா கால் கிலோ, பச்சைமிளகாய் 200 கிராம், 5 வாழைக்காய்கள் உள்ளன.
காய்கறிகளை வீடு, வீடாக சென்று வழங்குவதற்காக 20-க்கும் மேற்பட்ட குழுக்களை அமைத்துள்ளார். அவர்கள் காரைக்குடி, தேவகோட்டை, கண்ணங்குடி, சாக்கோட்டை, கோட்டையூர், பள்ளத்தூர், புதுவயல், கல்லல் உள்ளிட்ட பகுதிகளில் வழங்கி வருகின்றனர்.
மேலும் செந்தில்நாதன் தனது சொந்த செலவில் சிவகங்கை மாவட்டம் முழுவதும் உள்ள ஆதரவற்றோர், வீடுகளற்றோருக்கு தினமும் மதிய உணவு வழங்கி வருகிறார்.