

‘‘கரோனா தடுப்பில் தமிழகம் உட்பட அனைத்து மாநில அரசுகளும் சிறப்பாக செயல்படுகின்றன,’’ என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பாராட்டினார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக 41-ம் ஆண்டு தொடக்க விழா நடந்தது. கொடியேற்றி வைத்து தேசிய செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடு மிகவும் சங்கடமான சூழ்நிலையில் இருந்து வருகிறது.
பிரதமர் மோடி முயற்சியால் நம் நாட்டில் கரோனா தொற்று 3-ம் நிலைக்கு செல்லாமல் தடுக்கப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் உடனான உறவு தொப்புள் கொடி உறவு. ஆனால் ஜனதா கட்சியுடனான உறவு ரயில் சினேகம் போன்றது.
கேரளா, புதுச்சேரி முதல்வர்கள், நடிகர் ரஜினிகாந்த் மட்டுமின்றி சார்க் நாடுகளும் பிரதமரின் அழைப்பை ஏற்று விளக்கு ஏற்றினர். ஆண்டவன் மனிதன் உருவில் இருந்து கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
நாம் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம் என்பதை காட்டவே நாடே ஒளி ஏற்றியது.
ஒளியேற்றிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக அரசு உட்பட அனைத்து மாநில அரசுகளும் இரவு, பகல் பாராமல் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக பணியாற்றி வருகின்றன, என்று கூறினார்.