Published : 06 Apr 2020 05:01 PM
Last Updated : 06 Apr 2020 05:01 PM

ரேபிட் டெஸ்ட் என்றால் என்ன? கரோனாவைக் கண்டறிய எப்படி உதவும்?

1 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்ய உள்ளதாகவும், ஏப்ரல் 9-ம் தேதிக்கு மேல் ஆய்வுகள் தீவிரமாகுமென்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். ரேபிட் டெஸ்ட் எப்படி உபயோகமாகும், பிசிஆர் டெஸ்ட்டுக்கும் இதற்கும் உள்ள வித்தியாசம் என்ன?

இதுகுறித்து மருத்துவர்கள் மோகன், சித்ரா ஆகிய இருவரும் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

''கரோனா நோய்த்தொற்றைக் கண்டறிய தற்போதுள்ள ஒரே ஆய்வு நோயாளியின் தொண்டை மற்றும் மூக்குச் சளி மாதிரிகளை ஆய்வுக்கு எடுத்து செய்யும் பிசிஆர் பரிசோதனைதான். பிசிஆர் பரிசோதனையில் ஸ்வாப் எடுத்து சாம்பிளை ஸ்டோர் செய்து ஆய்வகம் அனுப்பும் வரை பல தடங்கள் உள்ளதால் அதில் நெகட்டிவ் வர வாய்ப்பு உண்டு. அதன் பின்னர் மீண்டும் சில காலம் கழித்து நோயாளிக்குப் பரிசோதனை செய்வார்கள். இந்தப் பரிசோதனையை ஒருமுறை செய்ய ரூ.4500 ஆகிறது. இதற்கு ஆய்வகங்களும் குறைவு.

இதில் நோய்த்தொற்று சந்தேகம் இருந்தால் மட்டுமே சோதனையிடப்படுகிறது. காரணம் ஆய்வகம் குறைவு, ஆய்வுக்காலம் அதிகம் என்பதால். தமிழகத்தில் இதற்கான ஆய்வகங்கள் அரசு மருத்துவமனைகளில் 11-ம் தனியார் வசம் 4 ஆய்வகங்களும் உள்ளன.

ஆனால் பல எதிர்க்கட்சித்தலைவர்களும், மருத்துவ நிபுணர்களும் வலியுறுத்துவது நமக்கு இந்த ஆய்வு வேகம் போதாது. பொதுமக்களை அதிக அளவில் ஆய்வு செய்து தொற்று உள்ளதா எனக் கண்டறிய வேண்டும், அதற்கு ரேபிட் டெஸ்ட் எடுக்க வேண்டும் என்பதே. இந்தியாவில் கேரள மாநிலம் இந்த முறைக்கு எப்போதோ மாறிவிட்டது.

இந்தியா முழுவதும் ரேபிட் டெஸ்ட் எடுக்க வேண்டியது அவசியம் என மத்திய அரசின் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 1 லட்சம் ரேபிட் பரிசோதனைக் கருவிகளை சீனாவிடமிருந்து இறக்குமதி செய்து பயன்படுத்த உள்ளனர்.

ரேபிட் டயக்னோஸ்டிக் டெஸ்ட் (ஆடிடி) என்ற பரிசோதனையின் மூலம் அல்லது மைக்ரோஸ்கோபி (பரிசானைக்கூட பரிசோதனை) மூலம் மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களைக் கண்டறியும் முறை உள்ளது.

அதே முறையில்தான் சம்பந்தப்பட்டவரின் ரத்தத்தில் உள்ள ஆன்டிபயாடிக் குறித்து ஆய்வு செய்யும் முறை இது. கிருமி தொற்று வருகிறதா என்பதை நமது உடலில் உருவாகும் ஆன்டிபயாடிக்கை வைத்து ஆய்வு செய்வார்கள். இதனால் 45 நிமிடத்தில் ஆய்வு முடிவு தெரிந்து விடும். இதில் பாசிட்டிவ் வந்தால் அதை வைத்து உடனடியாக அடுத்தகட்டப் பரிசோதனையைச் செய்யலாம்.

இதை ஸ்க்ரீனிங் டெஸ்ட்டாக வைத்துக்கொள்ளலாம். ரேபிட் டெஸ்ட் ஆன்டிபயாடிக் டெஸ்ட் அது ஸ்க்ரீனிங் டெஸ்ட் என்பதை அனுமதி அளித்து வழிகாட்டியதே ஐசிஎம்ஆர்.

பிசிஆர் டெஸ்ட் முதன்முறை வந்தபோது நெகட்டிவ் வந்தால் சும்மா இருக்கக்கூடாது. அடுத்தடுத்து பரிசோதனை செய்ய வேண்டும் என்கிறார் சுகாதாரத்துறைச் செயலர். அதற்காகத்தான் 28 நாட்கள் கண்காணிப்பு. ஆனால் ரேபிட் பரிசோதனையில் பிளட் சீரம் எடுத்துப் பார்ப்பார்கள். அதில் ஆன்டிபாடி லெவல், ஐஜிஜி லெவல் சோதிப்பார்கள். இதற்கு நேரமும் செலவும் மிகவும் குறைவு..

ரேபிட் டெஸ்ட் ரத்தம் எடுத்து டெஸ்ட் நெகட்டிவ் என வந்தால் பிசிஆர் டெஸ்ட் போகவேண்டிய அவசியமில்லை. நெகட்டிவாக இருந்து அறிகுறி எதுவும் இல்லை என்றால் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்குப் பின் மீண்டும் ரேபிட் டெஸ்ட் செய்யலாம்.

ரேபிட் பரிசோதனையை அனைத்து ரத்தப் பரிசோதனை மையத்திலும் பண்ணலாம். அதற்கான மருத்துவக் கருவிகள் சீனாவிலிருந்து இறக்குமதி ஆகப்போகிறது. அதில் சீரம் சோதனைக்குச் செலுத்துவதை சாதாரணமாக லேப்பிலேயே எடுக்கலாம்.

அடுத்த 10-ம் தேதி முதல் அரசு இந்த முறையை நடைமுறைக்கு கொண்டு வருகிறது. இதன்மூலம் அதிக அளவில் ஸ்க்ரீனிங் டெஸ்ட் செய்வதன் மூலம் நோய்த்தொற்று உள்ளவர்களை எளிதாக, குறைந்த செலவில் கண்டறியலாம்''.

இவ்வாறு மருத்துவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x