

அரசியல் கட்சி தலைவர்கள் அனைவருடனும் பிரதமர் கலந்தாலோசிக்க வேண்டும் என, பிரதமர் மோடிக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, டி.ராஜா இன்று (ஏப்.6) பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், "நமது நாடு மிகப் பெரும் இயற்கை பேரிடரை சந்தித்து வருகிறது. புதுவகை கரோனா வைரஸ் நோய் தொற்று பரவி வரும் பேரிடரை எதிர்த்து மக்கள் ஒன்றுபட்டு போராடி வருகிறார்கள்.
அரசியல், பொருளாதார, சமூகத் தளங்களில் கோவிட்-19 என்ற நோய் தொற்று பரவாமல் தடுக்க போராடி அரசும், அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து போராடி வருகின்றன.
இதுதொடர்பாக தாங்கள் மாநில முதல்வர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் கலந்துரையாடி வருகிறீர்கள். இதன் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தில் இடம் பெற்றுள்ள அரசியல் கட்சி தலைவர்களுடன் தாங்கள் காணொலி காட்சி வழியாக கலந்தாலோசனை நடத்த அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் உறுப்பினர் எண்ணிக்கை என்ற நுட்பக் காரணங்களால் சில முக்கிய அரசியல் கட்சிகள் விடுபட்டுள்ளன என்பதை தங்கள் கவனத்திற்கு தெரிவித்துக்கொள்கிறோம்.
உண்மையில், அரசியல் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டங்கள் ஒத்தி வைப்பதற்கு முந்தைய நாளில் அல்லது ஒத்தி வைக்கப்பட்ட ஓரிரு நாளில் கூட்டியிருக்க வேண்டும்.
எதுவாயினும் சரி, கரோனா வைரஸ் நோய் தொற்று தடுக்கப்பட தாங்கள் எடுத்து வரும் முயற்சிகள் குறித்து தேசிய அளவிலும், மாநிலங்கள் அளவிலும் அங்கீகரிக்கப்பட்ட, பதிவு செய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுடனும் தாங்கள் கலந்துரையாடல் நடத்துவது மேலும் பயனுள்ள முறையில் அமையும் என வலியுறுத்துகிறோம்.
தாங்கள் எமது கடிதத்தின் மீது ஆக்கப்பூர்வமான பரிசீலனை செய்வீர்கள் என நம்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.