கரோனா பாதித்தோர் சிகிச்சைக்காக கட்சி அலுவலகங்களை வழங்கி சிபிஐ
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இரு அலுவலகக் கட்டிடங்களை வழங்கியுள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலரும் முன்னாள் எம்.பி.யுமான பி.லிங்கம் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணனை இன்று சந்தித்தனர்.
அப்போது, கரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் சிகிச்சைக்காக முதல்வர் நிவாரண நிதிக்காக முன்னாள் எம்.பி.க்கள் பி.லிங்கம், அழகிரிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி ஆகியோர் தங்களது ஒரு மாத ஓய்வூதியத் தொகை மொத்தம் ரூ.70 ஆயிரத்துக்கான காசோலைகளை வழங்கினர்.
மேலும், விருதுநகர் புல்லலக்கோட்டை சாலையில் உள்ள கட்சி அலுவலகம் மற்றும் ராஜபாளையத்தில் உள்ள கட்சி அலுவலகங்களை கரோனா வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைக்காக பயன்படுத்திக்கொள்ளுமாறும் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்புதல் கடிதம் அளித்தனர்.
