

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மனின் தாயார் பொன்னுத்தாய் நேற்று வயோதிகம் காரணமாக இயற்கை எய்தினார். அவருக்கு வயது 90.
நிறைவாழ்வு வாழ்ந்தவர்கள் இறக்கிறபோது, கல்யாணச் சாவாகக் கருதி கொண்டாட்டங்கள் நடைபெறுவது வழக்கம். ஊரடங்கு அமலில் இருப்பதால், இறுதிச் சடங்குகள் அனைத்தும் மிக எளிமையாக நடைபெற்றன. வெளியூரில் இருந்து உறவினர்களும், நண்பர்களும் வர முடியாமல் போனது.
இந்தச் சிரமங்களை தாங்கிக் கொண்ட விதம் குறித்து சோ.தர்மன் நம்மிடம் பேசுகையில், "என்னுடைய பெரும்பாலான கதைகளில் தன்னுடைய நிஜ பெயரிலும் புனை பெயரிலும் உலா வந்தவர் என் அம்மா. பொதுவா நம்ம கலாச்சாரத்துல இந்த மாதிரியான இறப்புகளைக் கொண்டாடுவோம். அதுவும் எங்க சொந்த ஊரான உருளைக்குடியில கொட்டு அடிச்சி, கரகாட்டம் வெச்சு, பல்லக்கு மேல நின்னு மிட்டாய் வீசி ஆடம்பரமா ஊர்வலம் போவோம்.
சுடுகாடு வரைக்குமே கரகாட்டம் நடக்கும். ஊரடங்கு காரணமா அந்த மாதிரி எந்த நிகழ்ச்சிக்கும் நாங்க ஏற்பாடு பண்ணல. அதனால பெரிய கூட்டமும் இல்ல. நாங்க அண்ணந்தம்பி அஞ்சு பேரு. அதுல என் சொந்தத் தம்பி, சென்னை துறைமுகத்துல அதிகாரியா இருக்கார். அவராலேயே வர முடியாமப் போச்சு.
துஷ்டி (துக்கம்) கேட்க வர்றவங்க கையைப் பிடிச்சி ஆறுதல் சொல்றதுதான் வழக்கம். கரோனா காரணமா, பெரும்பாலானங்க எதுக்க எதுக்க நின்னு, கும்பிட்டுட்டுப் போயிட்டாங்க. விறகு யாவாரிங்க, காரியம் செய்ற தொழ்லாளிங்க (தொழிலாளி) எல்லாமே உள்ளூர்லேயே இருந்ததால எந்தப் பிரச்சினையும் இல்லாம அம்மா உடம்பை எரியூட்டினோம்.
இன்னைக்கு காலையில, அண்ணன் தம்பிங்க எல்லாம் சேர்ந்து ஒரு டாடா சுமோ பிடிச்சி, அங்கம் (அஸ்தி) கரைக்கப் போனோம். எங்கவூர்க்காரங்க தாமிரபரணி போறதுதான் வழக்கம். அங்க கெடுபிடி அதிகம் இருக்கும்னு விளாத்திகுளம் பக்கம் வைப்பாறு முகத்துவாரத்துக்குப் போனோம். ஆனா, சிப்பிகுளம் கிராம மக்கள் இந்த சமயத்துல வெளியூர்க்காரர்களுக்கு அனுமதியில்லைன்னு கடலுக்குப் போற பாதையை அடைச்சி வெச்சிருந்தாங்க.
அதனால ராமேஸ்வரம் போனோம். போலீஸ் கெடுபிடி அதிகமாகத்தான் இருந்துச்சி. ஆனா, நாலஞ்சி பேரு மொட்டைத் தலையோட அஸ்தி கரைக்கப் போறோம்னு சொன்னதும் போலீஸ் புரிஞ்சுக்கிட்டாங்க. எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது. ஆறுதல் சொன்ன அத்தனை பேருக்கும் நன்றி" என்றார்.