

ஊரடங்கு உத்தரவால் தோட்டங்களிலேயே அழுகிய நிலையில் கிர்ணி பழங்கள் உள்ளதால் வளர்த்த கையாலேயே அதைத் தூக்கி எறியும் மன உளைச்சலில் புதுச்சேரி கிராமப்புற விவசாயிகள் உள்ளனர்.
புதுச்சேரி கிராமப் பகுதிகளில் கோடைக்காலத்துக்கான பயிர்களான தர்பூசணி, கிர்ணி பழங்கள் பயிரிட்டு வெளிமாநில வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்வது வழக்கம். புதுச்சேரியிலும் பல இடங்களில் இப்பழங்கள் விற்பனையாகும்.
அதிக அளவில் புதுச்சேரி கிராமப்பகுதியில் பி.எஸ்.பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விளைந்த கிர்ணி பழங்களை வாங்க யாரும் வெளிமாநிலங்களில் இருந்து வரமுடியவில்லை. ஏனெனில், ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதே முக்கியக் காரணம். கடைகளும் மூடப்பட்டுள்ளன. தெருவில் மட்டுமே அதிக அளவில் கொட்டி இப்பழம் விற்கப்படும்.
கிர்ணி பழத்தை 7 ஏக்கரில் பயிரிட்ட பி.எஸ்.பாளையத்தைச் சேர்ந்த ரவி கூறுகையில், "கிர்ணி பழத்தில் அதிக வைட்டமின்கள், சத்துகள் நிறைந்துள்ளன. இதை கோடையில் ஜூஸ் செய்து சாப்பிடும் போது உடல் வெப்பத்தைத் தாங்கும்.
அத்துடன் நிக்கோட்டின் பாதிப்பிலிருந்து நுரையீரலைக் காக்கும். இதில் கொலஸ்ட்ரால் துளியும் இல்லை. நோய் எதிர்ப்பு சக்தி தரும். அல்சர் நோய்க்கு மருந்து. இதை அறிந்து கடந்த 6 ஆண்டுகளாக கிர்ணி பழம் பயிரிட்டு வந்தேன்.
இம்முறையும் நன்றாக கிர்ணி விளைச்சல் இருந்தது. அறுவடை செய்யும் நேரத்தில் கரோனா அச்சுறுத்தல் எழுந்தது. ஊரடங்கும் அமலானதால், வெளியூரிலிருந்து யாரும் வாங்க வர முடியாத சூழல் ஏற்பட்டது. தோட்டத்திலேயே அழுகி வீணாவதைப் பார்க்க முடியவில்லை.
நான் ரூ.4 லட்சம் செலவிட்டேன். அத்தனையும் கடன்தான். ரூ.10 லட்சம் வரை லாபம் கிடைக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால் மொத்தமாக வீணாகிவட்டது" என்று கூறுகிறார்.
தோட்டத்தில் பணியாற்றும் பெண்கள் கூறுகையில், "நாங்கள் கஷ்டப்பட்டு விளைவித்த பழங்களை நாங்களே தூக்கி எறிந்து அப்புறப்படுத்துகிறோம். எப்படியும் ரூ.25-க்கு விற்கும் இப்பழம் தற்போது ரூ.5-க்கு தான் விற்பனையாகிறது.
தோட்டத்தை தற்போது சுத்தம் செய்யத் தொடங்கிவிட்டோம். மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது. அடுத்த முறை எப்படி விவசாயம் நடக்கும் எனத் தெரியவில்லை. தோட்டத்தில் பார்த்து பார்த்து வளர்த்த பழங்கள் தற்போது வீணாகி நிற்பதைக் காண்பதே கஷ்டம்தான்" என்றனர்.
விவசாயிகள் தரப்பில் கூறுகையில், "கடன் வாங்கி பல லட்சம் செலவு செய்தோம். மொத்தமும் நஷ்டம்தான். அரசு எங்களுக்கு உதவுமா" என்று கேள்வி எழுப்புகின்றனர்.