

மதுரையில் சித்திரைத் திருவிழா நடைபெறுமா என்பது வரும் 14-ம் தேதிக்கு பிறகுதான் தெரியவரும் என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
வைரஸ் தாக்கம் கூடுகிறதா? குறைகிறதா? என்று அறிந்த பின்னரே சித்திரைத் திருவிழா பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்தார்.
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு வீடுகளுக்கேச் சென்று இலசமாக சுமார் 60,000 மாஸ்க்குகள் வழங்கும் நிகழ்வில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், “அரசாங்கம் சட்டம் போட்டு மக்களைக் கட்டுப்படுத்த முடியாது. மக்களாகவே தாங்களாக முன்வந்து சூழ்நிலை அறிந்து செயல்பட வேண்டும்.
உலக வல்லரசு நாடான அமெரிக்காவே கரோனாவால் முடங்கியிருக்கிறது. அங்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் தாக்கத்தினால் பலர் சுயகட்டுப்பாட்டைக் கடைபிடித்து வீடுகளில் இருக்கிறார்கள்.
தமிழக மக்களைக் காப்பதற்காக அனைத்து பணிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மதுரையில் சித்திரைத் திருவிழா நடைபெறுமா என்பது வருகின்ற 14-ம் தேதிக்கு பிறகுதான் தெரியவரும். வைரஸ் தாக்கம் கூடுகிறதா குறைகிறதா என்று அறிந்த பின்னரே சித்திரைத் திருவிழா பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும்.
இந்தியா முழுவதும் அனைத்து மக்களும் ஒற்றுமையாக விளக்கேற்றிய காட்சியைப் பார்க்க முடிந்தது. இது உண்மையிலேயே அனைவரும் ஒற்றுமையாக இருப்பதை எடுத்துக் காட்டுகிறது. மதுரையில் பல இடங்களில் பொதுமக்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக இருந்தனர்“ என தெரிவித்தார்