முதுமலையில் கரோனா விழிப்புணர்வு: அடம்பிடிக்காமல் ஒத்துழைக்கும் யானைகள்!

தனித்தனியே முகாம் யானைகளுக்கு உணவு வழங்கும் பாகன்கள்.
தனித்தனியே முகாம் யானைகளுக்கு உணவு வழங்கும் பாகன்கள்.
Updated on
2 min read

கரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு எல்லா இடங்களிலும் பரவிவரும் நிலையில், முதுமலையில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமிலும் அது எதிரொலித்திருக்கிறது.

கரோனா பரவலைத் தடுக்க, பாகன்கள் யானைகளுக்கு உணவளிக்கும் நேரத்தில் முக்கிய மாறுதல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நேர மாற்றத்துக்கு யானைகள் வழங்கிவரும் ஒத்துழைப்பு பாகன்கள், வனத்துறை அலுவலர்கள் என அனைவரையும் நெகிழச் செய்திருக்கிறது.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் வளர்ப்பு யானைகளுக்கான முகாம் ஒன்றை நிர்வகித்து வருகிறது வனத்துறை. இங்கே மொத்தம் 27 யானைகள் உள்ளன. அவற்றில் 18 யானைகள் தெப்பக்காடு முகாமிலும், மற்றவை ஈட்டி மரம், பாம்பேக்ஸ் முகாம்களிலும் வைத்துப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அன்றாடம் அருகில் உள்ள மாயாறு நதியில் இந்த யானைகளைக் குளிப்பாட்டுவார்கள் பாகன்கள். காலை 7 மணிக்கு யானைகளை ஆற்றில் இறக்கும் பாகன்கள், அவை உற்சாகமாகக் குளித்த பின்னர் காலை 9 மணிக்கு ஒவ்வொரு யானையாக மேலே அழைத்து வருவார்கள். பின்னர், உணவளிக்கும் கொட்டகை முன்பு யானைகளை வரிசையாக நிறுத்தி அவற்றுக்குப் பாகன்கள் உணவளிக்கும் நிகழ்வு, பார்க்கவே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்!

இந்தக் காட்சியைக் காண தினமும் 100 முதல் 500 வரை சுற்றுலாப் பயணிகள் குழுமிவிடுவார்கள். அந்தந்த யானைகளுக்குரிய பாகன்கள் தம் யானைகளுக்கு சோறு, களி, தேங்காய், ஊட்டச்சத்து உணவுகளைக் கலந்து கவளம் கவளமாக ஊட்டுவதைச் சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசிப்பார்கள். இதேபோல் மாலை 6 மணிக்கும் யானைகளை இதே இடத்தில் வரிசையாக நிறுத்தி உணவளிப்பார்கள் பாகன்கள்.

இந்நிலையில், கரோனா பரவலைத் தடுக்க இங்கு பல்வேறு மாறுதல்கள் செய்யப்பட்டிருக்கின்றன. பார்வையாளர்கள் யாருக்கும் அனுமதி இல்லை. அத்துடன், காலையில் 9 மணிக்கு யானைகளுக்கு உணவு அளிக்கும் நிகழ்வு, ஒரு மணிநேரம் முன்னதாகவே (8 மணி முதல் 9 மணி வரை) நடத்தப்படுகிறது. குறிப்பாக, ஒரே நேரத்தில் எல்லா யானைகளும் வரிசையாக நிறுத்தப்படுவதில்லை. பாகன்களும், அவர்களின் உதவியாளர்களும் ஒவ்வொரு யானையாக அழைத்து வந்து உணவூட்டிவிட்டுச் சென்ற பின்பே அடுத்த யானை அழைத்து வரப்படுகிறது. அதேபோல் யானைகளுக்கு உணவு வழங்கும் நிகழ்வும், மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை நடக்கிறது.

பொதுவாகவே, கொட்டகையில் தயாரித்து வைக்கப்பட்டிருக்கும் யானைகளுக்கான உணவைக் கலக்கும்போதும், யானைகளுக்கு அவற்றை ஊட்டும்போதும் பாகன்கள் ஒருவருக்கொருவர் முட்டி மோதிக்கொண்டே நடமாட வேண்டியிருக்கும். கரோனா தொற்றின் காரணமாக, இப்போது பாகன்கள் ஒவ்வொருவராகச் சென்று அந்த வேலைகளைச் செய்கிறார்கள். இந்தச் சமூக இடைவெளி கடந்த 24-ம் தேதி முதல் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது.

இதுகுறித்து வனத்துறை அலுவலர்கள் நம்மிடம் பேசும்போது, “கரோனா வைரஸ் பாதிப்பு வந்து விடக் கூடாது என்ற உலகளாவிய விழிப்புணர்வு நடைமுறையை இங்கேயும் பின்பற்றுகிறோம்.

யானைகளுக்கு ஒரே நேரத்தில் பாகன்கள் உணவளிக்கும்போது வைரஸ் தொற்று பரவிவிடும் வாய்ப்பு இருப்பதாலேயே இந்த ஏற்பாடு. இதுவரை இந்த முகாமில் உள்ள யானைகளுக்காகப் பாகன்களின் அலுவல் நடைமுறைகள் மாற்றப்பட்டிருக்கிறதேயொழிய, பாகன்களுக்காக யானைகளின் உணவு நேர வழக்கம் மாற்றப்பட்டதே இல்லை. பாகன்களுக்காக யானைகளின் உணவு நேரத்தையும், அது வழங்கப்படும் முறையையும் மாற்றியிருப்பது இதுதான் முதல் முறை. இதில் குறிப்பிடத்தக்க விஷயம், தன் பிரிய பாகன்களுக்காக இந்த மாற்றத்துக்கு யானைகளும் ஒத்துழைப்பு நல்குகின்றன என்பதுதான்” என்றனர்.

கரோனா காலம் விரைவில் முடிவடையட்டும். யானைகள் அணிவகுத்து உணவருந்தும் அந்த அழகிய காட்சி மீண்டும் நிகழட்டும்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in