Published : 06 Apr 2020 12:37 PM
Last Updated : 06 Apr 2020 12:37 PM

கோயம்பேடு மார்க்கெட் அனைத்து நுழைவு வாயில்களிலும் சுரங்கப்பாதை தெளிப்பான்கள்: ஓபிஎஸ் தலைமையிலான கூட்டத்தில் முடிவு

கரோனா தொற்று தடுப்புப் பணிகள் குறித்து துணை முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் இன்று ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் கோயம்பேடு மார்க்கெட்டில் பொதுமக்கள் நுழையும் அனைத்து வாயில்களிலும் சுரங்கப்பாதை தெளிப்பான்கள் அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தலைமைச் செயலகத்தில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் உயர் அதிகாரிகளுடன் ஆய்வினை மேற்கொண்டார்.

அந்தக் கூட்டத்தில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் கோயம்பேட்டில் ஆற்றி வரும் பணிகள் குறித்து செய்யப்பட்ட ஆய்வு:

சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின், 3 தலைமைத் திட்ட அமைப்பாளர்கள் தலைமையில் முதுநிலை திட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை திட்ட அமைப்பாளர்கள் கொண்ட குழுவால் கோயம்பேடு மொத்த காய்கறி மற்றும் வணிக அங்காடி வளாகத்தினுள் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தொற்று நோய்த் தடுப்புப் பணிகளான முகக்கவசம் அணிதல், கிருமி நாசினி தெளித்தல், குப்பைகளை அகற்றுதல் மற்றும் வாடிக்கையாளர்கள் கடைகளில் பொருட்கள் வாங்கும்போது சமூக இடைவெளி கடைப்பிடித்தல் போன்றவற்றை உறுதிப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் / வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிவதைக் கட்டயாமாக்குவதற்காக தினந்தோறும் 5000க்கும் மேற்பட்ட முகக்கவசங்கள் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை 50,000க்கும் மேற்பட்ட முகக்கவசங்கள் பொதுமக்களுக்கு விலையின்றி வழங்கப்பட்டுள்ளன.

சென்னைப் பெருநகர வடிகால் வாரியம் மற்றும் தீயணைப்புத்துறை ஆகிய துறைகளின் உதவியுடன் கோயம்பேடு வணிக வளாக அங்காடியின் உட்புற சாலைப்பகுதிகளில் தினந்தோறும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சாலைகள் சுத்தம் செய்யப்படுகின்றன. மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தின் உதவியுடன் தானியங்கி பறக்கும் இயந்திரத்தின் (ட்ரோன்) மூலம் கோயம்பேடு வணிகவளாக அங்காடியின் உள்பகுதிகளிலும் கிருமி நாசினி தினமும் தெளிக்கப்பட்டு வருகின்றது.

கோயம்பேடு வணிகவளாக அங்காடியின் வெளிப்பகுதிகளில் கரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்காக, வாகனங்கள் நுழையும் நுழைவாயில்கள் மற்றும் வெளிவாயில்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகின்றது.

வாடிக்கையாளர்கள் கைகளைச் சுத்தம் செய்யும் வகையில் தினந்தோறும் நுழைவாயில்களில் கிருமி நாசினி வழங்கப்பட்டு வருகின்றது.

சுகாதாரத்துறையின் மூலம் மருத்துவ குழுக்கள் வரவழைக்கப்பட்டு, காய்கறிகள் மற்றும் பழங்கள் கொண்டுவரும் வாகனங்களின் ஓட்டுநர், நடத்துநர் முதல் கோயம்பேடு வணிக வளாகத்துக்கு வரும் பொதுமக்கள் / வாடிக்கையாளர்கள் வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என மருத்துவப் பரிசோதனை செய்த பிறகே அவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

கோயம்பேடு மொத்த காய்கறி அங்காடி வளாகம் மற்றும் உணவு தானிய அங்காடி வளாகங்களில், அவ்வப்போது சேரும் குப்பைகள் உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட்டு பிறகு அந்த இடங்களில் தினமும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

சுகாதாரப்பணிகளை துரிதப்படுத்துவதற்காகவும் மற்றும் அங்காடிகளை சுத்தமாக வைத்துக்கொள்வதற்காகவும் கூடுதல் பணியாளர்களை அமர்த்துமாறு ஒப்பந்தக்காரர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டு, கரோனா தொற்றைத் தடுக்கும் பணிகள் தினமும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

கோயம்பேடு மொத்த வணிக வளாக அங்காடியில் அதிக பொதுமக்கள் வரத்துக் கொண்ட 10 நுழைவாயில்கள் கண்டறியப்பட்டு, பொதுத்துறை நிறுவனங்களின் உதவியுடன் சுமார் ரூ 17.0 லட்சம் செலவில் சுரங்கப்பாதை தெளிப்பான்கள் (Tunnel Sprayer) அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் குறித்த ஆய்வு:

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பாக, சென்னை மற்றும் மாநிலத்தின் இதர பகுதிகளில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வாடகைக் குடியிப்புகள் மற்றும் தமிழ்நாடு அரசு அலுவலர் குடியிருப்புகளில் கிருமி நாசினி திரவம் தினமும் தெளிக்கப்படுகிறது. மேற்படி பணிகள் தலைமை பொறியாளர்கள் மேற்பார்வையில் செயற்பொறியாளர்கள் மூலம் தினமும் ஆய்வு செய்யப்பட்டு, கரோனா தொற்று தடுப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியப் பணிகள் குறித்த ஆய்வு:

தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தால் சென்னை மற்றும் இதர நகரங்களிலுள்ள, அதிக மக்கள் வசிக்கின்ற 305 திட்டப்பகுதிகளில் பராமரிக்கப்படும் 1.49 லட்சம் அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு, ரூ.1.90 கோடி திட்ட மதிப்பீட்டில் கரோனா தொற்று பரவுதலைத் தடுக்க கிருமி நாசினி கலந்த நீர், மொத்தம் 91 கருவிகள் மூலமும், தெளிப்பான்கள் மூலமும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் உள்ள படிக்கட்டுகள், தாழ்வாரப்பகுதி, 10அடி உயரத்திற்கு வெளிப்புறப் பகுதிகள் மற்றும் இதர பொதுப் பகுதிகளில் மார்ச் 21 முதல் தெளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் 5 ஜெட்ராடிங் இயந்திரங்களைக் கொண்டு கிருமி நாசினி திரவம் திட்டப்பகுதிகளில் உள்ள சாலைகள் மற்றும் பொது இடங்களிலும் தெளிக்கப்படுகிறது. மேற்படி பணிகள் தலைமைப் பொறியாளர்கள், மேற்பார்வைப் பொறியாளர்கள் மற்றும் நிர்வாகப் பொறியாளர்கள் அவர்களின் தலைமையில் ஆய்வு செய்யப்பட்டு, பணிகள் தினமும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மேலும், கரோனா தனிமைப்படுத்துதல் மையம் கண்டறியும் குழுவில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய நிர்வாகப் பொறியாளர்கள் பிற துறை அலுவலர்களுடன் சேர்ந்து பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி (ம) நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசு முதன்மைச் செயலர் ராஜேஷ் லக்கானி, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர்-செயலர் முனைவர் கார்த்திகேயன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x