

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வண்ணங்கள் பாகுபாடின்றி நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் மாநில தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, சு.ஆ.பொன்னுசாமி இன்று (ஏப்.6) வெளியிட்ட அறிக்கையில், "கரோனா நோய் தொற்றை தடுக்கும் விதமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் தொழிற்சாலைகளிலும், தனியார், அரசு துறைகளில் பணியாற்றி வந்த பணியாளர்கள் மற்றும் அமைப்புசாரா, உடலுழைப்பு தொழிலாளர்கள் என லட்சக்கணக்கான ஏழை, எளிய மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் சூழ்நிலையில் தமிழக அரசு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1,000 ரூபாய் ரொக்கம் மற்றும் அரிசி, சர்க்கரை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை விலையில்லாமல் ஏப்ரல் 1-ம் தேதி முதல் நிவாரணமாக வழங்குவதாக அறிவித்தது.
இந்நிலையில், அனைத்து அட்டைதாரர்களுக்கும் நிவாரணம் வழங்குவதாக அறிவித்த தமிழக அரசின் அறிவிப்பு தமிழகம் முழுவதும் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் முறையாக கடைபிடிக்கப்படாமல் சர்க்கரை வாங்கும் வசதி கொண்ட வெள்ளை அட்டை வைத்திருக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா பொருட்கள் மட்டும் வழங்கி விட்டு, 1,000 ரூபாய் ரொக்கம் வழங்க மறுக்கப்பட்டு வருகிறது.
144 தடை உத்தரவால் அனைத்து மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் சர்க்கரை அட்டைதாரர்களை வசதிமிக்கவர்களாக கருதி அவர்களுக்கு 1,000 ரூபாய் ரொக்கம் வழங்க மறுப்பது கண்டனத்திற்குரிய செயலாகும்.
எனவே, தமிழக அரசு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் நிவாரணம் வழங்குவதாக அறிவித்த அறிவிப்பை முறையாக செயல்படுத்த பொது விநியோகத்துறை அதிகாரிகளுக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும்,
அதுமட்டுமின்றி, இதுவரை விலையில்லா பொருட்கள் வழங்கி, ரொக்கம் வழங்காத வெள்ளை அட்டை வைத்திருக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1,000 ரூபாய் உடனடியாக வழங்கிட நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக பொதுமக்கள் அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டு, தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் சூழ்நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணம் என்பது பொதுமக்கள் அனைவருக்கும் குடும்ப அட்டையின் வண்ணங்கள் பாகுபாடின்றி வழங்கப்பட வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.