Published : 06 Apr 2020 11:20 AM
Last Updated : 06 Apr 2020 11:20 AM

இந்தியா அலட்சியமாக இருந்தால் அதனால் ஏற்படும் அழிவு கணக்கிட முடியாததாக இருக்கும்; ராமதாஸ்

இந்தியா சில வாரங்கள் அலட்சியமாக இருந்தால் அதனால் ஏற்படும் அழிவு கணக்கிட முடியாததாக இருக்கும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக, ராமதாஸ் இன்று (ஏப்.6) தன் முகநூல் பக்கத்தில், "உலகின் அனைத்து நாடுகளும் அண்ணாந்து பார்க்கும் ஒரு நாடு உலகில் உண்டு என்றால், அது அமெரிக்கா தான். கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், தனிமனித சுதந்திரம் என அனைத்திலும் அது ஒரு கனவு தேசம். உலகின் எந்த ஒரு நாடும் முன்னேற்றத்திற்கான இலக்கை நிர்ணயித்தால் அது அமெரிக்காவை முன்னுதாரணமாக கொண்டதாகத் தான் இருக்கும்.

ஆனால், உலகின் அனைத்து நாடுகளும் ஒரு விஷயத்தில் நாம் அமெரிக்கா ஆகிவிடக் கூடாது என்று நடுங்கிக்கொண்டிருக்கின்றன. அது கரோனா வைரஸ் பரவல் விவகாரம் தான். கடந்த மாதம் இதே தேதியில் அமெரிக்க மக்கள்தொகையில் 0.0001 விழுக்காட்டினர் கூட கரோனா வைரஸ் குறித்து பேசத் தயாராக இல்லை. இன்னும் கேட்டால் அமெரிக்கர்களுக்கு கரோனா வைரஸ் குறித்து எதுவும் தெரிந்திருக்கவில்லை.

ஆனால், சரியாக ஒரு மாதம் கழித்து இன்றைய நிலையில் ஒட்டுமொத்த அமெரிக்காவும் கரோனாவை நினைத்து கதறிக்கொண்டிருக்கிறது. அந்த அளவுக்கு கரோனா அமெரிக்காவை பாடாய்ப்படுத்திக்கொண்டிருக்கிறது.
அத்தனைக்கும் காரணம்... அமெரிக்காவின் அலட்சியம் தான்.

அமெரிக்கா நினைத்தால் கரோனா பரவலை மிக எளிதாக தடுத்திருக்க முடியும். ஆனால், அதன் பேராசை தான் அழிவுக்கு அழைத்துச் சென்றுகொண்டிருக்கிறது. இப்போது சில புள்ளி விவரங்களைப் பார்ப்போம்.

இந்தியாவில் முதல் கரோனா வைரஸ் தொற்று ஜனவரி மாதம் 30-ம் தேதி ஏற்பட்டது. ஆனால், அப்போது அமெரிக்காவில் கரோனாவுக்கான அறிகுறியே இல்லை. பிப்ரவரி மாதம் 24, 25 ஆகிய தேதிகளில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு வந்த போதும் அமெரிக்காவை கரோனா எட்டிப்பார்க்கவில்லை.

அதன்பின்னர் பிப்ரவரி 26-ம் தேதி தான் அமெரிக்காவில் முதல் கரோனா தொற்று ஏற்பட்டது. அப்போது இந்தியாவில் 3 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். மார்ச் 4-ம் தேதி நிலவரப்படி இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 28. ஆனால், அதேநாளில் அமெரிக்காவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 26 மட்டும் தான்.

ஆனால், இன்று... இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,197. அமெரிக்காவிலோ இந்த எண்ணிக்கை 3 லட்சத்து 39 ஆயிரத்து 788. இந்தியாவை விட 80 மடங்கு அதிகம். இந்தியாவில் நேற்று ஒருநாளில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 561.

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை: 33 ஆயிரம். கிட்டத்தட்ட 66 மடங்கு அதிகம்.
இந்தியாவில் கரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 129. அமெரிக்காவில் இறந்தோர் எண்ணிக்கை 9618.75 மடங்கு அதிகம்.

ஒரு மாதத்தில் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான நிலைமை தலைகீழாக காரணம் ஏற்கெனவே நான் குறிப்பிட்டவாறு அமெரிக்காவின் அலட்சியமும், பேராசையும் தான். பொதுவாகவே அமெரிக்கா ஒரு முதலாளித்துவ நாடு. அங்கு மனித உயிர்களை விட பணத்திற்கு தான் அதிக மதிப்பு. அது தான் அமெரிக்காவை இந்த நிலைக்குக் கொண்டு வந்துள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100-ஐத் தொடுவதற்கு முன்பாகவே 3 வாரத்திற்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார். அடுத்த 10 நாட்களில், அதாவது மார்ச் 24-ம் தேதி இரவு இந்தியாவில் மூன்று வார ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.

அப்போது இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 519. இப்போது இந்தியாவில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.

அமெரிக்காவிலும் மார்ச் மாதத் தொடக்கத்தில் நிலைமை கட்டுக்குள் தான் இருந்தது. மார்ச் 10-ம் தேதி வாக்கில் அமெரிக்காவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 261 தான். அப்போதே அமெரிக்காவில் ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்பட வேண்டும் என்று பலரும் கூறினார்கள்.

ஆனால், அதை ஏற்க மறுத்துவிட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், "அமெரிக்கா உலகின் மிகப்பெரிய வல்லரசு. ஒரு சாதாரண காய்ச்சலுக்காக பொருளாதார நடவடிக்கைகளை முடக்க முடியாது" என்று அலட்சியமாக பேசினார். அதுமட்டுமல்ல...அமெரிக்காவில் அடுத்த சில நாட்களில் அதிசயம் நிகழும். கரோனா வைரஸ் ஒழிக்கப்படும் என்றும் கூறினார்.

ஆனால், அதன்பின் தினமும் 100, 200 என்ற அளவில் அதிகரிக்கத் தொடங்கிய கரோனா வைரஸ் பாதிப்பின் எண்ணிக்கை, மார்ச் 23-ம் தேதி வாக்கில் தினமும் 10 ஆயிரம் என்ற விகிதத்தில் அதிகரிக்கத் தொடங்கியது. மார்ச் 27, 28, 29, 30 ஆகிய நான்கு நாட்களும் சராசரியாக 20 ஆயிரம் என்ற விகிதத்தில் அதிகரித்தது.

மார்ச் 31, ஏப்ரல் 1, 2 ஆகிய தேதிகளில் முறையே 27 ஆயிரம், 29 ஆயிரம், 30 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் அதிகரித்த எண்ணிக்கை, கடந்த 3 நாட்களில் மட்டும் ஒரு லட்சம் உயர்ந்துள்ளது.

20 நாட்களுக்கு முன்பாக அலட்சியமாக பேசிய டிரம்ப், இப்போது அடுத்து என்ன ஆகுமோ? என்று புலம்பிக்கொண்டிருக்கிறார். ஊரடங்கு பிறப்பிக்க மறுத்த அவர், இப்போது ஏப்ரல் 30-ம் தேதி வரை சமூக இடைவெளி நடைமுறையை நீட்டித்திருக்கிறார்.

இன்னும் இரு நாட்களில் கரோனா வைரஸ் ஒழிக்கப்படும்; அதிசயம் நிகழும் என்று கூறிய அவர், அடுத்த இரு நாட்கள் அமெரிக்காவுக்கு முக்கியமானவை. கரோனா இறப்புகளை இரண்டரை லட்சத்திற்குள் கட்டுப்படுத்தி விட்டால் அது பெரும் அதிசயமாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

அமெரிக்கா தான் உலகுக்கு முதலாளி என்ற மனநிலை கொண்ட டிரம்ப் இப்போது ஒவ்வொரு நாட்டின் தலைவருக்கும் பேசி உதவி கேட்டுக்கொண்டிருக்கிறார். இந்திய பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு கரோனா சிகிச்சைக்கான ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை அனுப்பி வைக்கும்படி கெஞ்சுகிறார்.

தனது பரம்பரை எதிரியான ரஷ்யாவிடமிருந்து ஒரு விமானம் நிறைய முகக்கவசங்கள், மருந்து பொருட்கள் ஆகியவற்றை உதவியாக பெற்றிருக்கிறது. சுருக்கமாக கூறினால் கரோனாவை அடக்க உலக நாடுகளிடம் அமெரிக்கா மண்டியிட்டுக்கொண்டிருக்கிறது.

20 நாட்கள் அலட்சியமாக இருந்ததாலும், ஊரடங்கு பிறப்பித்தால் வணிகம் பாதிக்கப்பட்டு விடும் என்று கருதியதாலும் அமெரிக்கா இன்று மிகப்பெரிய பேரழிவை சந்தித்துக்கொண்டிருக்கிறது. உலகின் மிகப்பெரிய வல்லரசான அமெரிக்காவுக்கே இந்த நிலை என்றால், இந்தியா சில வாரங்கள் அலட்சியமாக இருந்தால் அதனால் ஏற்படும் அழிவு கணக்கிட முடியாததாக இருக்கும்.

அதனால் தான் சொல்கிறேன். ஊரடங்கை முழுமையாக கடைபிடியுங்கள். சில விஷயங்களை தியாகம் செய்யுங்கள். அடுத்த சில வாரங்களில் இந்தியா கரோனா வைரஸை வெற்றி கொள்ளும்; நாடு நலம் பெறும்.

தனித்திருப்போம்... தவிர்த்திருப்போம்... விழித்திருப்போம்... வைரஸைத் தடுப்போம்" என பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x