

தேசிய ஊரடங்கு உத்தரவால் கோயில் திருவிழாக்கள் நிறுத்தப்பட்டாலும் விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலுக்கு தனி ஆளாக அக்னிச்சட்டி ஏந்தி வந்து பெண் ஒருவர் நேர்த்திக்கடன் செலுத்தினார்.
விருதுநகர் மாவட்டத்தில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனிப் பொங்கல் திருவிழா.
உள்ளூர் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் வசித்து வரும் வெளி நாடுகளில் வசிக்கும் உள்ளூர்வாசிகள் இத்திருவிழாவிற்கு வருவது வழக்கம். கடந்த மாதம் 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி இருந்த விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனிப் பொங்கல் விழா தேசிய ஊரடங்கு உத்தரவால் ரத்து செய்யப்பட்டது.
மேலும் 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து அலகு குத்தியும் அக்னிசட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். கோயில் திருவிழா நிறுத்தப்பட்டபோதிலும் ஏராளமான பக்தர்கள் விரதத்தை கடைபிடித்து வந்தனர்.
இந்நிலையில் பங்குனி பொங்கல் திருவிழாவின் முக்கிய நாளான அக்னிச் சட்டி நேர்த்திக்கடன் செலுத்த முடியாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தவித்து வரும் நிலையில் இன்று காலை விருதுநகரில் பெண் ஒருவர் தனியாக அக்னிசட்டி ஏந்தி வந்து பராசக்தி மாரியம்மன் கோயிலில் வைத்து தனது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
விருதுநகரில் முக்கிய தெருக்களில் அக்னிச்சட்டி ஏந்தியவாறு அம்மனை வழிபடும் வகையில் "ஆகோ, அய்யாகோ" என பக்தை ஒருவர் விட்டு சென்றதை அங்கே நின்ற பொதுமக்கள் மிரட்சியுடனும் பக்தியுடனும் நின்று கைகூப்பி வணங்கினர்.