

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் இருவருக்கு கரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11-ஆக உயர்ந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா அறிகுறி உள்ளவர்களைக் கண்காணிக்க தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு வார்டு உள்ளது.
இதில், இதுவரை கரோனா அறிகுறியுடன் சோ்க்கப்பட்ட 50 பேருக்கு ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
அவா்களில் பேட்மாநகரத்தைச் சேர்ந்த தந்தை, மகன், ஹேம்லாபாத் பகுதியைச் சேர்ந்த ஒருவர், காயல்பட்டினம் பகுதியைச் சேர்ந்த இருவர், தூத்துக்குடி ராமசாமிபுரத்தைச் சேர்ந்த ஒருவர், ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 7 பேர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 6 பேர் டெல்ல மத நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்.
இதேபோல, செய்துங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒருவரும், கயத்தாறு அருகேயுள்ள அய்யனாரூத்து பகுதியைச் சேர்ந்த ஒருவரும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களும் டெல்ல நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள்.
இந்நிலையில், அய்யனாரூத்து பகுதியைச் சேர்ந்தவருடன் தொடர்பில் இருந்த அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் மற்றும் ஓர் ஆணுக்கு கரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்று இருப்போரின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்து, இரட்டை இலக்கத்தை அடைந்துள்ளது.
இதுதவிர, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள 9 பேருக்கு ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு வார்டில் தொற்று உறுதி செய்யப்பட்ட 7 பேரும், ரத்த மாதிரி சேகரிக்கப்பட்ட 9 பேரும் என மொத்தம் 16 போ் தற்போது சிகிச்சையில் உள்ளனர் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.