கயத்தாறு அருகே சுகாதார ஆய்வாளரை தாக்கிய 6 பேர் கைது

அய்யனார்ஊத்தில் 108 அவசர ஊா்தியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்.
அய்யனார்ஊத்தில் 108 அவசர ஊா்தியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்.
Updated on
1 min read

டெல்லி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே அய்யனார்ஊத்தை சேர்ந்த 45 வயதுடையவருக்கு கடந்த 2-ம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவரது குடும்ப உறுப்பினர்கள் 5 பேர் தனிமைப்படுத் தப்பட்டிருந்தனர். இந்நிலையில், குடும்ப உறுப்பினர்களான 11 மாத குழந்தை உள்ளிட்ட 5 பேரையும் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் அனுமதிப்பதற்காக 108 அவசர ஊர்தி கோவில்பட்டியில் இருந்து சென்றது.

இதில் வெள்ளாளன்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் ரெ.காளிராஜ் மற்றும் ஊழியர்கள் சென்றனர்.

அப்போது, அய்யனார் ஊத்து கிராமத்தைச் சேர்ந்த சிலர் 108 அவசர ஊர்தியை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சுகாதார ஆய்வாளர் காளிராஜ் தாக்கப்பட்டார். போலீஸார் உதவியுடன் சம்பந்தப்பட்ட 5 பேரும் கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர். இந்நிலையில், சுகாதார ஆய்வாளர் காளிராஜ் கயத்தாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சுகாதார ஆய்வாளரை தாக்கியது, அரசுப் பணி செய்யவிடாமல் தடுத்தது, வாகனத்தை சேதப்படுத்தியது, ஊரடங்கு உத்தரவை மீறி கூட்டமாக திரண்டது உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் அய்யனார்ஊத்தை சேர்ந்த சாகுல் ஹமீது, அஜிஸ், மைதீன், தமீம் அன்சாரி, ஆசிக், கமால், காரூன் ஆசித், முகம்மது யூசுப், நவாஸ்கான், முகமது ரபீக், ஜலால், இஸ்மாயில் ஆகிய 12 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனிடையே, சுகாதார ஆய்வாளர் காளிராஜ் தாக்கப்பட்ட வழக்கில் அஜிஸ், மைதீன், ஆசிக், முகம்மது யூசுப், நவாஸ்கான், ஜலால் ஆகிய 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in