

டெல்லி சென்று தருமபுரி திரும்பிய 35 பேருக்கு கரோனா தொற்று அறிகுறி இல்லை என பரிசோதனையில் தெரிய வந்ததால் அனைவரும் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தருமபுரி மாவட்டத்தில் இருந்து 35 பேர் டெல்லி மாநாட்டுக்குச் சென்று ஊர் திரும்பி இருந்தனர். தங்களுக்கு கரோனா தொற்று அறிகுறி உள்ளதா என பரிசோதனை செய்யக்கோரி 35 பேரும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை கடந்த 1-ம் தேதி மாலை அணுகினர். அவர்கள் அனைவரிடமும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. முடிவுகள் வரும் வரை அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களுக்கான பரிசோதனை முடிவுகளின்படி 35 நபர்களில் யாருக்கும் கரோனா தொற்று இல்லை என உறுதியானது. எனவே, அவர்கள் அனைவரும் நேற்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போது, மாவட்ட ஆட்சியர் மலர்விழி, எஸ்பி ராஜன், மருத்துவக் கல்லூரி முதல்வர்(பொ) சிவகுமார் மற்றும் சுகாதாரத் துறையினர் ஆகியோர் கரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு அறிவுரைகளை வழங்கினர். மேலும், குறிப்பிட்ட சில நாட்களுக்கு ஒவ்வொருவரும் வீட்டில் சுய தனிமைப்படுத்துதலை பின்பற்றுமாறு கூறி அனுப்பி வைத்தனர்.