Published : 06 Apr 2020 07:28 AM
Last Updated : 06 Apr 2020 07:28 AM

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர் மாவட்டங்களில் தடையை மீறிய இறைச்சி, மீன் கடைகளுக்கு சீல்

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர் மாவட்டங்களில் தடையை மீறி செயல்பட்ட இறைச்சி, மீன் கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கரோனா வைரஸ் பரவலை தடுக்கும்விதமாக 21 நாள் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், இறைச்சிக் கடைகளில் எப்போதும் கூட்டம் இருப்பதுடன், அங்கு விதிகளை மீறி இறைச்சி விற்கப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. சென்னை மாநகராட்சி சார்பில் புளியந்தோப்பு, வில்லிவாக்கம், சைதாப்பேட்டை ஆகிய இடங்களில் இயங்கி வரும் இறைச்சிக் கூடங்களில் தற்போது ஆடுகள் அறுப்பதில்லை.

இந்நிலையில், சென்னை முழுவதும் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அப்போது பல கடைகளில் விற்கப்பட்ட இறைச்சி, விதிகளை மீறி, மாநகராட்சி ஆடு அறுக்கும் இடங்களில் வெட்டப்படாதவை என்பது தெரியவந்தது. ஆனால், அதிகாரிகள் சோதனைக்கு வருவதற்கு முன்பாகவே பல கடைகளில் பெரும்பாலான இறைச்சி விற்றுத் தீர்ந்தன. மீதம் இருந்த 425 கிலோ இறச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

விதிகளை மீறியும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் இறைச்சி விற்பனை செய்த 52 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்தக் கடைகளை அடுத்த 3 மாதங்களுக்கு திறக்க முடியாது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், காந்தி சாலை, சுன்னத் மசூதித் தெருவை சேர்ந்தவர் ஒருவரும் அடங்குவார். ஆகவே, இத்தெருக்களைச் சுற்றியுள்ள 9 வார்டுகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.

இறைச்சி, மீன் கடைகளில் சமூக விலகல் கடைப்பிடிக்கப்படாததால், செங்கை, காஞ்சி, திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது இறைச்சி மற்றும் மீன் கடைகளை திறக்க தடை விதித்துள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில், சாலையோரங்கள், ஏரிக்கரைகளில் மீன் விற்பனையில் ஈடுபட்டவர்களை போலீஸார் எச்சரித்து அனுப்பினர். செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் நகராட்சியில் தடையை மீறி செயல்பட்ட ஒரு இறைச்சிக் கடைக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் தடையை மீறி செயல்பட்ட 6 இறைச்சி, மீன் கடைகளுக்கு திருத்தணி நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். பூந்தமல்லி நகராட்சியில் 3 கோழி இறைச்சி கடைகளை அதிகாரிகள் மூடினர். திருவள்ளூர் நகராட்சியில் சுமார் 20 இறைச்சி, மீன் கடைகளை நகராட்சி அதிகாரிகள் மூடச் செய்தனர்.

வேலூரில் இறைச்சி விற்ற 12 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில கடைகளை திறக்க முயன்றபோது காவல் துறையினர் மூடுமாறு எச்சரித்தனர்.

ஆவடி மாநகராட்சியில் உள்ள அம்மா உணவகங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள், மாநகராட்சி சுகாதார பணியாளர்களின் தேவைக்காக, ரூ.10 லட்சம் மதிப்பிலான காய்கறிகள், மளிகை பொருட்கள், முகக்கவசங்கள், கிருமிநாசினி, கவச உடைகளை நேற்று ஆவடி வியாபாரிகள் நல சங்க கூட்டமைப்பு, ஆவடி போர் ஊர்தி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்டவை சார்பில் நேற்று மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரனிடம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் பங்கேற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x