

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தமிழக சுகாதாரத் துறை சார்பில் வீடுதோறும் நடத்தப்படும் ஆய்வுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று முஸ்லிம் அமைப்புகள் கேட்டுக் கொண்டுள்ளன.
தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு முஸ்லிம் அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம், தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபையின் தலைவர் மவ்லானா பி.ஏ.காஜா முகைதீன் தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் கே.எம்.காதர் முகைதீன், தமுமுக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவல் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் தற்போதைய காலகட்டத்தில் நமது சமூக மக்கள் அனைவரும் தொடர்ந்து அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் பல்வேறு சமுதாய இயக்கங்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று தமிழகத்தில் அனைத்து பள்ளிவாசல்களிலும் எவ்வித தொழுகையும் நடப்பதில்லை. முழுமையான முடக்கம் நீக்கப்படும் வரை இந்நிலை தொடர வேண்டும் என்று அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகளையும், மக்களையும் கேட்டுக் கொள்கிறோம்.
தமிழக சுகாதாரத் துறை சார்பில் வீடுதோறும் நடத்தப்படும் ஆய்வுக்கு மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சமூக வலைதளங்களில் பரப்பப்படும் அனைத்தும் நம்பகத்தன்மை உடையவை அல்ல. எனவே, சமூக வலைதளங்களில் வரும் அனைத்தையும் அப்படியே பரப்ப வேண்டாம்.
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் முஸ்லிம் அமைப்புகளின் அங்கீகாரம் பெற்ற 7373736085 என்ற கரோனா அவசர உதவி மையத்தின் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த எண்ணில் பதிவு செய்யப்படும் தகவல்கள் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு இடர்பாடுகளின் தீர்வுக்கு வழிகாணப்படும்.
கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்பட வேண்டும். கரோனாவால் பாதிக்கப்பட்டவர் பற்றிய தகவல் உள்ளாட்சி மற்றும் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டு, அவர்கள் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகள் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்துகிறது.
இந்நிலையை அரசு போக்க வேண்டும். சமூக ஊடகங்கள், பத்திரிகைகள், தொலைக்காட்சிகளில் தொடர்ந்து வெறுப்பு பரப்புரை செய்வோர் மீது மேலும் தீவிரமாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.