

கரோனா நிவாரண தொகையை வங்கியில் செலுத்துவதாகக் கூறி வங்கிக் கணக்கு விவரங்கள் உட்பட எந்தத் தகவலையும் போனில் யார் கேட்டாலும் தெரிவிக்க வேண்டாம் என சைபர் கிரைம் போலீஸார் எச்சரித்து உள்ளனர்.
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கத்துடன் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என அரசு அறிவித்தது. இதன்படி, நிவாரணம் வழங்கும் திட்டம் தொடங்கியது.
இந்நிலையில், தமிழக அரசு, நியாய விலைக்கடைகளில் இனி ரூ.1,000 பணம் வழங்கப்படாது. அதற்கு பதிலாக, வீடு வீடாகச் சென்று பணம் வழங்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. பயனாளர்களின் வங்கி கணக்கில் நிவாரணத் தொகையை நேரடியாக செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.
இச்சூழலை சாதகமாக்கி மோசடிக்காரர்கள் பணம் பறிக்க வாய்ப்புள்ளது என வங்கி மோசடி தடுப்பு பிரிவில் உள்ள சைபர் கிரைம் போலீஸார் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து மேலும் கூறும்போது, ‘வங்கியில் இருந்து பேசுவதாகவும் கரோனா நிவாரணத் தொகையை உங்கள் கணக்கில் செலுத்த வேண்டும் எனக் கூறி வங்கி தொடர்பான விவரங்கள், ரகசிய எண்களை யார் கேட்டாலும் தெரிவிக்க வேண்டாம். உடடினயாக அருகில் உள்ள காவல் நிலையங்களில் இதுகுறித்து தெரிவிக்க வேண்டும்’ என்று கூறினர்.