Published : 06 Apr 2020 07:21 AM
Last Updated : 06 Apr 2020 07:21 AM

நகரின் வாசிப்பு கலாச்சாரமே மாறிவிட்டது- மதுரை தென்மேற்கு முகவர் ஆர்.கே.பிரகாஷ் பெருமிதம்

நமது சேவை இப்போதுதான் அதிகம் தேவை என்று உணர்ந்து, ஊரடங்கு காலத்திலும் வீடு தவறாமல் நாளிதழ் போடுவதை ஒரு தவம்போல செய்து கொண்டு இருக்கும் மதுரை திருமலை காலனி பகுதி முகவர் ஆர்.கே.பிரகாஷ், அதுதொடர்பான அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

“மதுரைன்னு ஒரு ஊர் இல்லைன்னா, தமிழ்நாட்டுப் பத்திரிகைகளோட பக்கமே குறைஞ்சி போயிடும். அவ்வளவு செய்திகளும், சம்பவங்களும் நடக்கிற ஊர் இது. அதேநேரத்துல பத்திரிகை வாசிக்கிறவங்களும் அதிகம். மதுரையில ஒரு டீக்கடை, வடைக்கடைக்கு கூட்டம் வரணும்னா ரெண்டு பேப்பர் வாங்கிப் போட்டா போதும். அப்படியே வீட்டுத் தொல்லையில இருந்து தப்பிச்சி, ஒரு டீக்கு மட்டும் காசு குடுத்துட்டு ரெண்டு பேப்பரையும் படிச்சிட்டுப் போயிடுவாங்க.

இப்ப அவங்கள்ல பாதிப்பேரை சொந்தமா பேப்பர் வாங்க வெச்சிடுச்சி கரோனா. ஏன்னா, அவங்களால உலக நடப்பு தெரிஞ்சுக்காம இருக்கவே முடியாது.

‘'செல்லுல வர்றதுல பாதிக்கு மேல வதந்திமாப்ள... பேப்பர்ல போட்டிருக் கானா?’ன்னுதான் முதல்ல கேட்பாங்க. ஊரடங்கு நேரத்துல முதல் ரெண்டு நாள் திணறி, மூணாவது நாளே பேப்பர் வாங்க ஆரம்பிச்சிட்டாங்க.

எந்த இடத்துல பேப்பர் கட்டு வந்து இறங்குதுன்னு தெரிஞ்சிக்கிட்டு அங்கேயே வந்து பேப்பர் வாங்க ஆரம்பிச்சிட்டாங்க.

‘வீட்டைவிட்டு வெளியே போனீங்க...’ என்று மனைவியின் எச்சரிக்கைக்கு ஆளான வீட்டுக் காரர்கள், நமக்குப் போன் போட்டு பேப்பர் கேட்டு கெஞ்சுறாங்க.

நாளை நமதே சார்

பொதுவாகவே, ‘இந்து தமிழ் திசை’ வாசகர்கள் கொஞ்சம் ஆழமா,நிதானமா செய்தி வாசிக்கிறவங்களா இருப்பாங்க. இப்ப நிறைய நேரம்இருக்கிறதால, நுனிப்புல் மேய்ற மாதிரி பேப்பரை புரட்டுறவங்ககூட இப்ப, ‘இந்து தமிழ் திசை குடுங்க சார்'னு கேட்டு வாங்குறாங்க. உள்ளூர் செய்தி எதில் அதிகம் வருதோ அதைத்தான் வாசிப்போம்னு இருந்த வாசகர்கள்கூட, ‘இந்து தமிழ் திசை’யோட நடுப்பக்கம், இணைப்பிதழ் கட்டுரைகளுக்கு ரசிகர்களா மாறிட்டாங்க.

மதுரையோட வாசிப்பு கலாச்சாரத்தையே கரோனா மாத்திக்கிட்டு இருக்குது. அதனால எத்தனை இடைஞ்சல் வந்தாலும், ரொம்ப நம்பிக்கையா பேப்பர் போடுறோம். நாளை நமதே சார்" என்கிறார் பிரகாஷ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x