Published : 05 Apr 2020 06:25 PM
Last Updated : 05 Apr 2020 06:25 PM

வாழ்க்கை முறை மாறுதல்களே வைரஸ் பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாக்கும்: ஆர்ய வைத்ய ஃபார்மஸி தலைவர் பி.ஆர்.கிருஷ்ணகுமார் உறுதி

நமது வாழ்க்கை முறையில் சில மாறுதல்களை மேற்கொண்டு, கரோனா வைரஸ் போன்ற பாதிப்புகளில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்று ஆர்ய வைத்ய ஃபார்மஸி தலைவர் பி.ஆர்.கிருஷ்ணகுமார் கூறினார்.

கரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளை எதிர்கொள்ளவும், தடுக்கவும் சர்வதேச அளவில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அண்மையில் இந்தியப் பிரதமர் மோடி, நாட்டின் முன்னணி ஆயுர்வேத மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

வீடியோ கான்ஃபரன்சிங் முறையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கோவை ஆர்ய வைத்ய ஃபார்மஸி தலைவர் டாக்டர் பி.ஆர்.கிருஷ்ணகுமாரும் பங்கேற்று பல்வேறு யோசனைகளைத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் `இந்து தமிழ்' செய்தியாளரிடம் கூறியதாவது:

கரோனா பாதிப்புகளைத் தடுக்கும் வகையில் ஆர்ய வைத்ய ஃபார்மஸி சார்பில் நவக்கரை, வாளையாறு, மாவுத்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 30 ஆயிரம் பேருக்கு கபசுர குடிநீர் வழங்கியுள்ளோம். வைரஸ் கிருமிகள் குறித்து அதர்வண வேதத்திலேயே 134 கிருமிகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. 1950-ம் ஆண்டுகளிலேயே கரோனா வைரஸ் பாதிப்பு இருந்துள்ளது.

நம் ஒவ்வொருவர் உடலிலும் கிருமிகள் உள்ளன. அதேசமயம், அவற்றை எதிர்த்துப் போராடும் அளவுக்கு நமது உடல் ஆரோக்கியம் வலிமை மிகுந்ததாக இருந்தது. அதற்கு முக்கியக் காரணம் நமது வாழ்க்கை முறைதான். `உணவே மருந்து; மருந்தே உணவு' என்று கூறி, சத்தான, ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே உண்டு கொண்டிருந்தோம். இதையும் மீறி நோய் தாக்கும்போது, நமது வாழ்க்கை முறையுடன் இணைந்திருந்த ஆயுர்வேதம், சித்த மருத்துவம் நம்மை குணமாக்கியது.

காய்ச்சல் ஏற்பட்டால், உடனே மருந்து கொடுக்க மாட்டார்கள். 4, 5 நாட்கள் பரிசோதித்து, என்ன வகையான காய்ச்சல் என்று ஆய்வு செய்து, பின்னர் தேவையான மருந்து கொடுப்பார்கள். ஆனால், இப்போது காய்ச்சல் அறிகுறி இருந்தாலே, உடனடியாக மாத்திரை போட்டுக் கொள்கிறோம்.

நமது வாழ்க்கை முறையே மாறிவிட்டது. தேவையற்ற உணவை, தவறான நேரத்தில் சாப்பிடுகிறோம். ஓய்வெடுக்க வேண்டிய நேரத்தில் விழித்துக் கொண்டிருக்கிறோம். சுறுசுறுப்பாக இருக்க வேண்டிய நேரத்தில் உறங்குகிறோம்.

எனவே, நமது வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வது மிக அவசியமாகும். தேயைவான அளவு உணவு, சரியான ஓய்வு, அதிகாலையில் எழுந்து யோகா, தியானம், மூச்சுப்பயிற்சியில் ஈடுபடுவது, கீரை, காய்கறி வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்வது என நமது முன்னோர் வகுத்துத் தந்த பாதையில் பயணித்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, வைரஸ் கிருமிகள் தாக்குதலில் இருந்து தப்பலாம். நுரையீரல் வலிமையாக இருந்தால், கரோனா வைரஸ் பாதிப்பு இருக்காது. துளசி, ஜீரகம் கலந்த நீரையும், சுடு தண்ணீரையும் பருகுவது உடலுக்கு உகந்தது.

நமது பாரம்பரிய ஆயுர்வேதம், சித்தா மருந்துகள் குறித்த விழிப்புணர்வு தற்போது அதிகரித்து வருகிறது. பல வெளிநாட்டவர் இதைக் கற்றுக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். எந்த பக்க விளைவுகளும் இல்லாத மருத்துவ முறைகள் இவை.
அண்மையில் ஆயுர்வேதா, சித்தா மருத்துவர்களுடன் பிரமதர் மோடி உரையாடியபோது, நமது பாரம்பரிய மருத்துவ முறைகள், மூலிகை வைத்தியம் குறித்தெல்லாம் மாணவ, மாணவிகளுக்கு கற்றுத்தர வேண்டும். அட்டைவணைப்படுத்தப்பட்ட வாழ்க்கை முறையை அறிமுகப்படுத்த வேண்டும். கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக ஆய்வு நடத்த, ஆயுர்வேதம், சித்தா, ஹோமியோபதி போன்ற மருத்துவமுறைகளுடன், ஆங்கில மருத்துவம் பயின்றவர்களையும் இணைத்து, உரிய பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என்றெல்லாம் வலியுறுத்தினோம்.

இது தொடர்பாக உரிய உத்தரவுகளைப் பிறப்பிப்பதாக பிரதமர் தெரிவித்தார். இதேபோல, கேரள மாநில முதல்வரிடம் பேசியுள்ளோம். கரோனா வைரஸ் பாதிப்புகளை தடுப்பது தொடர்பாக ஒரு அறிக்கையையும் சமர்ப்பித்துள்ளோம். அதன் மீது நடவடிக்கை எடுப்பதாக கேரள முதல்வர் தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆயுர்வேதம், சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளோம். இதுவரை ஆங்கில மருத்துவத்தில்கூட கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. பல்வேறு மருத்துவ முறைகள் மூலம் ஆய்வு மேற்கொண்டால், நிச்சயம் வைரஸைக் கட்டுப்படுத்தும் மருந்து கண்டுபிடிக்க வாய்ப்புண்டு. நமது பாரம்பரிய வைத்திய முறைகளை உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்துள்ளது.

இது தொடர்பான விழிப்புணர்வை வெளிநாட்டவர்களுக்கு ஏற்படுத்துவதன் மூலம், இந்திய மருத்துவத் துறை மேலும் வளர்ச்சியடைந்து, பொருளாதார ரீதியாகவும் தேசத்துக்கு பலன் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டோம். நாடு முழுவதும் உள்ள ஆயுர்வேதம், சித்தா மருத்துவர்கள், கரோனா தடுப்புப் பணிகளில் இணைந்து பணியாற்ற ஆர்வமுடன் இருக்கிறார்கள். அவர்களையும் வைரஸ் தடுப்புப் பணிகளில் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ளோம். அதேபோல, ஆயுர்வேத மருத்துவத்தை மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக கற்றுத் தருவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்துள்ளோம்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் தடுப்புப் பணிகளுக்கு உதவுவது தொடர்பாக அரசு கேட்டுக்கொண்டால், உடனடியாக ஒத்துழைக்க தயாராக இருக்கிறோம். இவ்வாறு பி.ஆர்.கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x