

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றும் அமைச்சுப்பணி அலுவலர்கள் 53 பேர் கரோனா பிரச்சினை ஆரம்பித்ததிலிருந்து பணிக்கு வராமல் நழுவி விட்டனர். இதனால் போலீஸார் சம்பந்தப்பட்ட சம்பளம் உள்ளிட்ட அமைச்சுப்பணிகள் பாதிக்கப்பட்டதால் உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழக காவல்துறை காவற்பணியைச் செய்யும், காவல் பணியில் காவல்துறையில் பல்வேறு பிரிவுகள் உண்டு. போதைபொருள் தடுப்பு பிரிவு, பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு, தீயணைப்பு, சிறை, சிலைக்கடத்தல், பொருளாதார குற்றப்பிரிவு, மத்திய குற்றப்பிரிவு, கியூ பிராஞ்ச், உளவுப்பிரிவு என பல உண்டு.
ஆனால் இந்தப்பணியில் உள்ள காவலர்களுக்கு சம்பளம், லீவு, பென்ஷன், அலுவல் ரீதியான பிரச்சினைகள் கையாள அமைச்சுப்பணி என தனியாக பணியாளர்கள் உள்ளனர். இவர்கள் நேரடியாக தலைமைச் செயலக பணி நியமனம் என்பதால் வானளாவிய அதிகாரம் படைத்தவர்கள் என்று போலீஸாரிடையே பேச்சு உண்டு.
போலீஸார் ஊரையெல்லாம் மிரட்டினால் போலீஸாரை மிரட்டும் அதிகாரம் படைத்தவர்கள் இவர்களில் சிலர் உண்டு. காரணம் அனைத்து பணம் சம்பளம் குறித்த பிரச்சினைகளுக்கும், பென்ஷன் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கும் குடிமகன்கள் அரசு அதிகாரிகளிடம் நிற்பதுபோன்று காவல்துறை அலுவலகங்களிலேயே இயங்கும் அமைச்சுப்பணி அதிகாரிகளிடம்தான் போய் நிற்க வேண்டும்.
இந்நிலையில் கரோனா தேசிய பேரிடருக்கு ஊரெல்லாம் அனைவரும் நோய்த்தொற்று நடவடிக்கையில் ஈடுபட்டு தங்கள் பணியை செய்து வருகின்றனர். மருத்துவர்களும், தமிழக காவல்துறையினரும் பலராலும் பாராட்டப்படுகின்றனர்.
ஆனால் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் அமைச்சுப்பணியில் உள்ள அலுவலர்கள் கடந்த 23-ம் தேதிமுதல் காரணம் எதுவுமின்றி விடுப்பு எடுத்துள்ளனர். இதுகுறித்து சென்னை காவல்துறை ஆணையர் அலுவலக காவலர் நலன் நிர்வாக அலுவலர் ஏஜி பாபு அனைவருக்கும் மெமோ அனுப்பியுள்ளார்.
அதில், “ கடந்த 23 -ம் தேதியிலிருந்து எவ்வித காரணமும் சொல்லாமல் 53 பேர் பணிக்கு வராமல் உள்ளனர். பெரும்பாலானோர் சென்னை பெருநகர காவல் நிலையத்தில் பணிபுரியும் (இணைப்பில் குறிப்பிட்டுள்ள) அமைச்சு பணியாளர்கள் அவர்களின் பெயருக்கு எதிரே குறிப்பிட்டுள்ள நாள் முதல் அலுவலகத்தில் வராமல் எவ்வித தகவலும் தெரிவிக்காமல் தன்னிச்சையாக விடுப்பு எடுத்து அனுபவித்து வருகிறீர்கள் .
மேலும் பெரும்பாலானோர் எவ்வித முன் அனுமதி பெறாமல் தலைமை இடத்தை விட்டுச் சென்றதாக தெரிகிறது. இது போன்ற அலுவலக பணியில் அக்கறையற்று நடந்து கொள்ளும் இத்தகைய அமைச்சு பணியாளர்கள் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது என்பதை தெரிவிப்பதுடன் தங்களின் மீது ஏன் உரிய நடவடிக்கை எடுக்க கூடாது என்பதற்கான விளக்கத்தை சம்பந்தப்பட்ட காவல் துணை ஆணையர் (நிர்வாகம் மற்றும் தலைமையிடம்) ஏப்.8-க்கு முன் நேரில் ஆஜராகி சமர்ப்பிக்குமாறு கூறப்படுகிறது.
அவ்வாறு விளக்கம் அளிக்கவில்லை எனில் விளக்கமளிக்க ஏதுமில்லை என கருதி அரசு விதிகளின்படி உரிய மேல் நடவடிக்கை தொடரப்படும் என தெரிவிக்கப்படுகிறது”.
இவ்வாறு காவல் ஆணையர் தரப்பில் நிர்வாக அலுவலர் தெரிவித்துள்ளார். இதேப்போன்று மார்ச் 30 முதல் ஏப்.14 வரை அமைச்சுப்பணியாளர்களை இரண்டுக்குழுக்களக பிரித்து பணிக்கு வர உத்தரவிட்டதிலும் ஒழுங்கீனமாக வராமல் பணியை புறக்கணித்தவர்களுக்கும் காவல் ஆணையர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அந்த மெமோ நோட்டீஸில் “பார்வையில் காணும் குறிப்பாணையில் தற்போது பரவும் கரோனா நோய் தடுப்பு குறித்து சென்னை பெருநகர காவல் அலுவலக அமைச்சுப் பணியாளர்கள் மார்ச் 30 முதல் ஏப்ரல் 14 வரை இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு அலுவலக பணி மேற் கொள்ளுமாறு அறிவுரை வழங்கப்பட்டது.
அவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முதல் குழு மார்ச் 30 முதல் ஏப் 5 வரை அலுவலகம் வரும் அமைச்சுப் பணியாளர்கள் ஒரு சிலர் அலுவலகத்திற்கு வராமல் தன்னிச்சையாக விடுப்பு அனுபவித்து அடுத்த நாள் அலுவலகம் வருகின்றனர்.
இது போன்று ஒதுக்கீடு செய்யப்பட்ட நாட்களில் உரிய அனுமதியின்றி முழுமையாக அலுவலகத்திற்கு வராமல் இருப்போர், தொடர்ச்சியாக அலுவலகம் வந்து பணிபுரிய வேண்டும் என அறிவுறுத்தபடுகிறது.
மேலும் இதுபோன்று முறையாக அலுவலத்திற்கு வராதவர் மீது அரசு விதிகளின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது”.
இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.