

தேர்தல் பணி செய்ய விருப்பமுள்ள மாநில அரசு ஊழியர்கள் சென்னை மாநகராட்சியை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
மாநில அரசு அலுவலகங்களில் பதிவுரு எழுத்தர், இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர் நிலையில் பணியாற்றும் மாநில அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட விருப்பமிருந்தால் தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள வாக்காளர் பதிவு அதிகாரி மற்றும் சென்னை மாநகராட்சி மண்டல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.
ஊழியர்கள் சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வசிப்பவராக இருக்க வேண்டும். அவர்கள், தாங்கள் வசிக்கும் பகுதியிலேயே அலுவலக பணிநேரம் தவிர்த்து இதர நேரம் மற்றும் விடுமுறை தினங்களில் வாக்குச்சாவடி அலுவலராக தேர்தல் பணியாற்றலாம்., வாக்குச்சாவடி அலுவலராக பணிபுரியும் அலுவலர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி, ஆண்டு ஊதியம் வழங்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.