Published : 05 Apr 2020 01:29 PM
Last Updated : 05 Apr 2020 01:29 PM

ஏப்ரல் 5-ம் தேதி ஏன் ஒளியேற்ற வேண்டும்? - ஆளுநர் தமிழிசை விளக்கம்

ஏப்ரல் 5-ம் தேதி ஏன் ஒளியேற்ற வேண்டும் என்று தனது ட்விட்டர் பதிவில் வீடியோ ஒன்றை வெளியிட்டு ஆளுநர் தமிழிசை விளக்கமளித்துள்ளார்

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. தமிழகத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இதனிடையே பிரதமர் மோடி ஏப்ரல் 3-ம் தேதி நாட்டு மக்களுக்கு வீடியோ பதிவு மூலம் உரையாற்றினார். ஊரடங்கில் மக்களின் ஒற்றுமையைப் பாராட்டிய பிரதமர் மோடி, அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு விளக்குகள் அனைத்தையும் 9 நிமிடங்கள் அணைத்துவிட்டு விளக்கு, மெழுகுவர்த்தி, டார்ச் லைட் அல்லது செல்போன் லைட் ஏதாவது ஒன்றை ஒளிர விடவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதற்குப் பலரும் ஆதரவு தெரிவித்து, அனைவரும் ஒளியேற்ற வேண்டும் என்று வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்கள். இது தொடர்பாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் பேசியிருப்பதாவது:

"இன்று இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் நம் இல்லங்களுக்கு முன்னால் தீபம் ஏற்ற இருக்கிறோம். நம் பாரத பிரதமர் மோடி அவர்கள், நம் அனைவரும் நம் இல்லங்களுக்கு முன்னால் தீபம் ஏற்ற வேண்டும். தீபங்கள் இல்லையென்றால் மெழுகுவர்த்திகள் ஏற்றலாம். அதுவுமில்லை என்றால் டார்ச் லைட்டுகளை ஒளிர விடலாம். அதுவுமில்லை என்றால் நம் செல்போன் ஒளிகளை ஒளிரவிடலாம்.

ஏன் இதைச் செய்ய வேண்டும். சத்தத்திற்கென்று ஒரு சக்தி இருக்கிறது. அதனால் சத்தம் எழுப்பி, ஒலி எழுப்பி மருத்துவர்களுக்கு நன்றி சொன்னோம். ஒளிக்கென்று ஒரு சக்தி இருக்கிறது. அதனால் ஒளி ஏற்றி நமக்கு நாமே நன்றி சொல்லிக் கொள்வோம். ஏன்? இந்த சவாலான சூழ்நிலையை, இந்த கரோனா என்ற தொற்று நோயை 130 கோடி மக்களும் ஒன்றிணைந்து எதிர்த்துக் கொண்டிருக்கிறோம்.

அதனால் உள்ளத்தால் ஒன்றிணைந்து, அதே நேரத்தில் தீபங்கள் ஏற்றும் பொழுது தூரத்தைச் சரியாகக் கடைப்பிடித்து நாம் தீபம் ஏற்றுவோம். நாம் ஏற்றும் போது நம்முடன் 130 கோடி சகோதர, சகோதரிகளும் பக்கபலமாக இருக்கிறார்கள் என்ற பலத்தோடு தீபம் ஏற்றுவோம். ஆனால் தீபம் ஏற்றும் பொழுது, விளக்குகளை அணைக்க வேண்டும் என்று பிரதமர் சொன்னார். விளக்குகளை அணைத்து தீபம் ஏற்றும் அதே நேரத்தில் மற்ற மின்சார உபகரணங்களை அணைக்க வேண்டாம் என்று அரசாங்கம் சொல்லியிருக்கிறது.

தீபம் ஏற்றும் போது கைகளை சோப்பாலும், தண்ணீராலும் கழுவுங்கள். நீங்கள் எரிசக்தி மிகுந்த கிருமி நாசினியைப் பயன்படுத்தி விட வேண்டாம். ஏனென்றால் அது உங்கள் கைகளுக்கு ஆபத்தாய் முடியும். ஆகையால், பாதுகாப்பாகத் தீபங்களை ஏற்றுவோம். இந்த ஒளியை ஒளிரச் செய்வோம். இந்த கரோனா என்ற நோயை விரட்டுவோம். வாருங்கள்... தீபம் ஏற்றுவோம்"

இவ்வாறு தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x