

கரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக தொழில்கள் முடங்கியுள்ளதால் வணிகர்களுக்கு வட்டி யில்லா கடனுதவி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்:
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதேநேரம் மத்திய, மாநில அரசுகளின் வெளியிட்ட அறிவிப்புகள் சிறு, குறு வணிகர்களுக்கு உதவும் வகையில் இல்லை.
இதையடுத்து வாடகை கட்டடங்களில் இயங்கும் வணிகர்களுக்கு 3 மாதங்கள் வாடகை கட்டணம் செலுத்த விலக்கு அளிக்க வேண்டும். சொந்த கட்டடங்களில் உள்ளவர்களுக்கு தண்ணீர் வரி, சேவை வரி உள்ளிட்ட வரிகளை செலுத்த ஓராண்டு விலக்கு அளிக்க வேண்டும். சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான மின்பயன்பாட்டுக்கு சாதாரண நுகர்வோருக்குரிய கட்டணத்தை நிர்ணயித்து அதை செலுத்த 6 மாதம்வரை விலக்கு அளிக்க வேண்டும்.
தொழில் நடைபெறாத சூழலில் ஊழியர்களுக்கு சம்பளத்தை முழுமையாக அளித்தால் சிறு, குறு தொழில்கள் மேலும் நொடிந்து போகும். எனவே, பிஎஃப் மூலம் கணிசமான தொகையை திருப்பி அளித்து தொழில் செய்வதற்கான நிதி ஆதாரத்தை அளிக்க வேண்டும். அதேபோல், ஊழியர்களுக்கான 3 மாத ஊதியத்தில் 75 சதவீதத்தை மாநில அரசு வழங்குவதுடன், வங்கிகள் மூலம் முத்ரா திட்டத்தில் மானியத்துடன் கூடிய வட்டியில்லா கடனுதவி தரவேண்டும்.
மேலும், சிறு, குறு வணிகர்களை முழுமையாக பதிவு செய்து மத்தியஅரசின் ஓய்வூதியம் கிடைக்க வழிசெய்வதுடன், மகளிர் தொழில் முனைவோருக்கு 10 சதவீத சலுகைகளை கூடுதலாக அளிக்க வேண்டும். வணிகர்களுக்கு, வேளாண் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், வணிகர் நல வாரியத்தை அமைத்து அனைவரது ஆலோசனைகளைப் பெற்று செயல்பட அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.