Published : 05 Apr 2020 07:51 AM
Last Updated : 05 Apr 2020 07:51 AM

அனைத்து இன்ப துன்பங்களிலும் உற்ற துணையாக தமிழகம் இருக்கும்: கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் பழனிசாமி உறுதி

தமிழகத்துடனான கேரள எல்லைகள் மூடப்படவில்லை என கேரள முதல்வர் தெரிவித்த நிலையில், அனைத்து இன்ப துன்பங்களிலும் கேரள மாநில சகோதர, சகோதரிகளின் உற்ற துணையாக தமிழகம் இருக்கும் என்று முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நேற்று முன்தினம் இரவு வரை 411 ஆக இருந்தது.இந்நிலையில், தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அண்டை மாநிலமான கேரளா, தனது தமிழகத்துடனான எல்லைப் பகுதிகளை மூடி வருவதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியானது.

இதுதொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தி யாளர்களிடம் கூறும்போது, “தற்போது ஒரு தவறான செய்தி வந்துள்ளது. தமிழகத்தில் வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால்கேரளா, தமிழகத்துடனான சாலைகளை, மண் கொண்டு மூடிவருவதாக தவறான செய்தி கூறப்பட்டுள்ளது. நாங்கள் இதுபோன்ற ஒரு விஷயத்தை சிந்திக்கவே இல்லை. அவர்கள் நமது அண்டை மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல; அவர்களை நாம் சகோதரர் களாகவே பார்க்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

அன்பு பாராட்டுவதில் மகிழ்ச்சி

இதுதொடர்பான, கேரள முதல்வரின் செய்தியாளர் சந்திப்பு குறித்த காட்சிகளை இணைத்து தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் பழனிசாமி, ‘‘கேரள மாநிலம் தமிழக மக்களை சகோதர, சகோதரிகளாக அன்பு பாராட்டுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். அனைத்து இன்ப துன்பங்களிலும் கேரள மாநில சகோதர, சகோதரிகளின் உற்ற துணையாக தமிழகம் இருக்கும் என அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நட்புறவும் சகோதரத்துவமும் என்றென்றும் வளரட்டும்’’ என்று பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x