

கரோனா முன் தடுப்பு நடவடிக்கையாக டெல்லி மாநாட்டில் பங்கேற்றுத் திரும்பியவர்கள், வெளிநாடு சென்றவர்கள், சென்னை வணிக அங்காடியில் வேலை பார்த்தவர்கள், ஈரோடு மற்றும் திருப்பூரில் வேலை செய்தவர்கள் என 45 பேர் சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கடலூர் மாவட்டத்துக்கான கரோனா சிறப்பு வார்டில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், கரோனா தனி வார்டில் வைக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 32 வயதுடைய ஆண் ஒருவர் நேற்று உயிரிழந்தார். இவர் ஈரோடு மாவட்டத்தில் எலெக்ட்ரீஷியனாக வேலை பார்த்தவர். ஊருக்கு வந்த இவருக்கு கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டு, கரோனா தனி வார்டில் சேர்க்கப்பட்டார். இவரது ஆய்வக பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை.
இதற்கிடையே கரோனா வைரஸ் தொற்று உள்ள 2 பேரின் குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சிதம்பரம் அரசு மருத்துவமனையிலும், ஒருவரது குடும்பத்தை சேர்ந்த 3 பேர் ராஜா முத்தையா மருத்துக் கல்லூரி மருத்துவமனையிலும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
மேலும் 5 பேருக்கு தொற்று
இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 3 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று மேலும் 5 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.