Published : 05 Apr 2020 07:19 AM
Last Updated : 05 Apr 2020 07:19 AM

கரோனா வைரஸ் பாதிப்புக்கு 135 தனியார் மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை பெறலாம்: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை

கரோனா வைரஸ் பாதிப்புக்கு 135 தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம் என்று தமிழகஅரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் 23 ஆயிரத்துக்கும் அதிகமான படுக்கைகள் கொண்டசிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வார்டுகளில் கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் மற்றும் அறிகுறிகளுடன் இருப்பவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையில், கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருசிலர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றுவருவதால், இதை முறைப்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது.

இதையடுத்து, தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் பெரிய தனியார் மருத்துவமனைகளின் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள், தமிழகஅரசின் அறிவுரைகள், வழிகாட்டு தல்களை தெரிவித்தனர். மேலும், மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளில் 25 சதவீதத்தை கரோனா சிகிச்சைக்கு ஒதுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். கரோனா வைரஸ் சிகிச்சை, தடுப்புநடவடிக்கைகளில் தமிழக அரசுடன் இணைந்து செயல்படுவதாக தனியார் மருத்துவமனைகளின் நிர்வாகிகள் உறுதி அளித்தனர்.

இந்நிலையில், தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு 135 தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம் என்று தமிழகஅரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதில், சென்னையில் அதிகபட்சமாக மணப்பாக்கம் மியாட்,தரமணி விஎச்எஸ், ஆழ்வார்பேட்டை காவேரி, வடபழனி விஜயா, பெருங்குடி ஜெம், அடையாறு போர்ட்டிஸ் மலர், பள்ளிக்கரணை டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனை உட்பட11 மருத்துவமனைகள் இடம்பெற்றுள்ளன.

இதுபோல, மாவட்ட வாரியாக தனியார் மருத்துவமனைகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x