Published : 05 Apr 2020 07:12 AM
Last Updated : 05 Apr 2020 07:12 AM

ஏப்ரல் 15-ம் தேதி முதல் நாடு முழுவதும் பேருந்து, ரயில், விமான சேவை மீண்டும் தொடங்குமா?- ஆர்வத்துடன் டிக்கெட் முன்பதிவு செய்யும் மக்கள்

நாடு முழுவதும், வரும் 14-ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கை நீட்டிக்கும் திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை என்ற மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து, வரும் 15-ம் தேதி முதல் விரைவுரயில்களில் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்வதில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. மற்றொருபுறம் பேருந்துகள், விமானங்களின் சேவை தொடங்குமா என கேள்வி எழுந்துள்ளது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசுடன் மாநிலஅரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. குறிப்பாக, ரயில், பேருந்துகள், விமான போக்குவரத்து சேவையை வரும் 14-ம் தேதி வரை ரத்து செய்துள்ளது. அதன்படி, மாநிலங்களில் அரசு பேருந்துகளின் சேவை முடங்கியுள்ளது.

இதேபோல், உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்களின் சேவையும் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், உணவு, மருத்துவ உபகரணங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கான ரயில்கள், லாரிகள் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன.

முன்பதிவில் போட்டி

இதற்கிடையே, நாடு முழுவதும், வரும் 14-ம் தேதிக்குப் பிறகும் ஊரடங்கை நீட்டிக்கும் திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை என மத்திய அரசு சமீபத்தில் அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து, பயணிகள் விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, வரும் 15-ம் தேதி, பயணம் செய்ய மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தெற்கு ரயில்வேயில் தென்மாவட்டங்களுக்குச் செல்லும் விரைவு ரயில்களில் அதிக அளவில் மக்கள் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். பெரும்பாலான விரைவு ரயில்களில் 40 சதவீத டிக்கெட் முன்பதிவு முடிந்துள்ளது.

அனந்தபுரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கொல்லம் விரைவு ரயில்களில் கணிசமான அளவுக்கு டிக்கெட்டுகள் இருக்கின்றன. இருப்பினும், திருச்செந்தூர், பாண்டியன், பொதிகை விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்து ஆர்ஏசி மற்றும்காத்திருப்பு பட்டியல் இருந்தது. ஆனால், அனைத்து விரைவு ரயில்களிலும் ஏசி பெட்டிகளில் டிக்கெட் முன்பதிவு காலியாகவே இருந்தது.

சில மாற்றங்களுக்கு வாய்ப்பு

இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘வரும்14-ம் தேதிக்குப் பிறகும் ஊரடங்கை நீட்டிக்கும் திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை என்ற மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, நாடுமுழுவதும் மக்கள் விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். கோடை விடுமுறையும் அடுத்து வருவதால் மக்கள் சொந்த ஊருக்குச் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர்.

தெற்கு ரயில்வேயில் தென்மாவட்ட விரைவு ரயில்களில் அதிக அளவில் மக்கள் முன்பதிவு செய்து வருகின்றனர். இருப்பினும், வரும்14-ம் தேதிக்குப் பிறகு முழு அளவில் ரயில்கள் இயக்குவது ரயில்வே வாரியம் இதுவரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. அதே சமயம் டிக்கெட் முன்பதிவை நிறுத்தவும் அறிவுறுத்தவில்லை. எனவே, சில மாற்றங்களோடு ரயில்களை இயக்க வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக, சிறப்பு ரயில்கள், வாராந்திர ரயில்களின் சேவை முழு அளவில் இயக்க வாய்ப்புகள் குறைவாக இருக்கும்’’ என்றனர்.

பேருந்துகள் ஓடுமா?

இதுதொடர்பாக அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் சிலர்கூறும்போது, ‘‘அரசுப் பேருந்துகளில் நீண்ட நாட்களுக்கு முன்பதிவு செய்து பயணம் செய்வது மிகவும் குறைவுதான். இருப்பினும், மக்கள் சிலர் அரசு விரைவுப் பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். குறுகிய தூர பயணங்கள்தான் அதிகமாக இருக்கும். தற்போதுள்ள நிலவரப்படி, அரசுப் பேருந்துகளை இயக்க வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும், தமிழக அரசு அறிவித்த பிறகே, அரசுப் பேருந்துகளை முழு அளவில் இயக்குவோம்’’ என்றனர்.

விமான பயணம்

14-ம் தேதிக்குப் பிறகு ரயில் மற்றும் பேருந்துகளுக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதி இருப்பது போல், விமான பயணத்துக்கு முன்பதிவு செய்யும் வசதி இன்னும் கொடுக்கப்படவில்லை. இதனால், விமான சேவை தொடக்கம் உறுதி செய்யப்படவில்லை.

இதுதொடர்பாக சென்னை விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, “இந்திய விமான நிலையங்கள் ஆணையகத்தில், வரும் 15-ம் தேதி கூட்டம் நடைபெறவுள்ளது. அந்தக் கூட்டத்தில்தான் எப்போது விமான சேவையைத் தொடங்குவது என்று முடிவு செய்யப்படும். ஏர் இந்தியா விமான சேவை, ஏப்ரல் 30-ம் தேதி வரை இல்லை” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x