Last Updated : 05 Apr, 2020 07:09 AM

 

Published : 05 Apr 2020 07:09 AM
Last Updated : 05 Apr 2020 07:09 AM

கரோனா பரிசோதனைகள்.. யாருக்கு, எப்போது, ஏன் அவசியம்?

டெல்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் ஒருவரது உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படுகிறது. (கோப்புப் படம்)

நாவல் கரோனா வைரஸ் ஏற்படுத்தும் கோவிட்-19 நோய் உலக அளவில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனித உயிர்களை பலிவாங்கிவிட்டது. இந்த கொடுமையை தவிர்க்க, முறையான பரிசோதனைகள் மூலம் நோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து, சிகிச்சை அளிப்பது முக்கியம் என்கின்றனர் அறிவியலாளர்கள். இந்தியாவில் இதற்கு என்னென்ன பரிசோதனைகள், யாருக்கு, எப்போது செய்யப்படுகிறது என்பதை தெரிந்துகொள்வோம்.

RT-PCR பரிசோதனை என்றால் என்ன? அதன் முக்கியத்துவம் என்ன?

RNA, DNA என்ற இரண்டும் ஓர் உயிரினத்தின் செல்களில் காணப்படும் உட்கரு அமிலங்கள். கரோனா வைரஸில் இருப்பது RNA. மனித செல்களில் இருப்பது DNA. இதில் DNA முக்கியம். இது ‘ஏடிஜிஸி’ எனும் ‘வேதிப்படி’களால் ஆன நீளமான சங்கிலி. பார்ப்பதற்கு முறுக்கிக்கொண்ட நூலேணி போல இருக்கும். இதில்தான் மரபணு (Gene) உள்ளது. நம் உடலில் நாவல் கரோனா வைரஸ் புகுந்திருந்தால் அதன் மரபணு, நம் சுவாச செல்களில் இருக்கும். அப்படிஇருக்கிறதா என்று பார்ப்பதுதான்RT-PCR (Reverse Transcription Polymerase Chain Reaction) பரிசோதனை. இந்தியாவில் இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் உத்தரவுப்படி, கோவிட்-19 காய்ச்சலை உறுதிசெய்ய இந்த பரிசோதனையைத்தான் மேற்கொள்ள வேண்டும்.

இந்த பரிசோதனை எப்படி செய்யப்படுகிறது?

மூக்கு அல்லது தொண்டையின் உட்பகுதியில் இருந்து பிரத்யேக நைலான்/ டெக்ரான் குச்சியால் சளியை சுரண்டி எடுப்பார்கள். சிலருக்கு இருமலில் வரும் சளியை சேகரிப்பார்கள் அல்லதுநுரையீரல் சளியை பிராங்காஸ்கோப் கருவி மூலம் உறிஞ்சி எடுப்பார்கள். வைரஸ் உயிரோடு இருப்பதற்கான ஊடகம் உள்ளஒரு பாட்டிலில் இதை செலுத்துவார்கள். இதேபோல 2 மாதிரிகள்தயார் செய்யப்படும். அவற்றைகுளிரூட்டப்பட்ட பெட்டியில் வைத்து, அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வுக் கூடத்துக்குப் பத்திரமாக அனுப்புவார்கள்.

அங்கு முதல்கட்டமாக, செல்களை உடைக்கும் ஒரு திரவத்தில் முதலாவது மாதிரியில் இருக்கும் சளியைக் கலப்பார்கள். அப்போது சளியில் உள்ள செல்கள் உடைந்து, வைரஸ்கள் பிரிந்து, இறந்துவிடும்.

இறந்த வைரஸ்களில் இருந்து RNA மரபணுக்கள், சில என்சைம்களின் உதவியுடன் பிரித்தெடுக்கப்படும். RT-PCR கருவி DNA மரபணுக்களை மட்டுமே பரிசோதிக்கும் என்பதால், பிரிக்கப்பட்ட RNA மரபணுக்களுடன் ‘Reverse Transcriptase’ எனும் என்சைமை கலப்பார்கள். இது RNAமரபணுக்களை DNA மரபணுக்களாக மாற்றும். பிறகு அதை RT-PCR கருவிக்குள் செலுத்துவார்கள். அது DNA மரபணுக்களை கோடிக்கணக்கில் நகல் எடுத்தும்,விஸ்வரூபம் எடுக்கவைத்தும் காண்பிக்கும். இப்போது அவற்றில் ‘Fluorescent’ சாயத்தை செலுத்துவார்கள். அப்போது வெளிப்படும் ஒளிவெள்ளத்தில் நாவல் கரோனா வைரஸுக்கே உரித்தான மரபணு வரிசை இருக்கிறதா என்பது துல்லியமாகத் தெரிந்துவிடும். அப்படி இருந்தால் சம்பந்தப்பட்ட நபருக்கு கரோனா தொற்று இருப்பது அறியப்படும். இந்த பரிசோதனை முடிவு தெரிய 24 மணி நேரம் ஆகும்.

உள்ளூர் ஆய்வுக்கூடத்தில் இதுஉறுதியானாலும், 2-வது மாதிரியை புனேவில் உள்ள தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட்டுக்கு (NIV) அனுப்புவார்கள். அங்கு மீண்டும் அது பரிசோதிக்கப்பட்டு, தொற்று உறுதி செய்யப்படும். முதல் சோதனையில் வைரஸ் தொற்றுஇல்லை என்று முடிவு வந்தாலும்கூட, 2-வது பரிசோதனையும் செய்யப்படும். இதற்கு 7-10 நாட்கள் ஆகும். அரசு மருத்துவமனைகளில் இலவசமாக செய்யப்படுகிறது. ரூ.4,500 கட்டணம் செலுத்தி தனியார் ஆய்வுக்கூடங்களிலும் இதை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

‘ஆன்டிபாடி பரிசோதனை’ என்பது என்ன?

பொதுவாக, ஒரு வைரஸ் நம் உடலை தாக்கினால், உடலின் நோய்எதிர்ப்பு மண்டலம் அந்த கிருமியை எதிர்த்து தாக்கி அழிக்கும். அப்போது அந்த கிருமிக்கு எதிராக ‘ஆன்டிபாடிகள்’ (Antibodies) ரத்தத்தில் உருவாகும். அவற்றில் IgG,IgM முக்கியமானவை. புரத மூலக்கூறுகளால் ஆன இவற்றை ரத்தப்பரிசோதனையில் அறிய முடியும். இதுவே ‘ஆன்டிபாடி பரிசோதனை’.

இதை எதற்கு, எப்படி மேற்கொள்கின்றனர்?

ரத்த மாதிரியை எடுத்து அதில் உள்ள செல்களை எல்லாம் நீக்கிய பிறகு, ‘சீரம்’ எனும் தெளிவான திரவம் கிடைக்கும். அதில் IgG, IgM ஆன்டிபாடிகள் இருக்கிறதா என்று சோதித்து அறிவது ‘ஆன்டிபாடி’ பரிசோதனை. ‘ஆன்டிபாடி’ இருந்தால் ‘பாசிட்டிவ்’ என்று முடிவு சொல்வார்கள்.

அரை மணி நேரத்தில் இதன்முடிவு தெரிந்துவிடும். செலவும் குறைவு. ஆனால் இதன் முடிவுஉறுதியானது அல்ல. இதில்‘பாசிட்டிவ்’ முடிவு வந்தவர்களை அடுத்தகட்ட RT-PCR பரிசோதனைக்கு கட்டாயம் அனுப்பிவைக்க வேண்டும். அதில்தான் தொற்று உறுதி செய்யப்படும்.

பொதுவாக, ஒரு வட்டாரத்தில் கரோனா வேகமாக பரவும்போது அதன் அறிகுறிகள் உள்ளவர்களுக்கும் சந்தேகம் உள்ளவர்களுக்கும் இந்த சோதனையை மேற்கொண்டு, பாசிட்டிவ் முடிவு வந்தவர்களை மட்டும் RT-PCR பரிசோதனைக்கு அனுப்பி உறுதி செய்துவிடலாம். மற்றவர்களை அந்த பரிசோதனைக்கு அனுப்பத் தேவையில்லை. அவர்களை 2 வாரங்களுக்கு தனிமைக் கண்காணிப்பில் (Quarantine) மட்டும்வைத்துக்கொள்ளலாம். நோயாளிகளை வேகமாகப் பிரித்தறிய இது உதவுகிறது.

கரோனாவுக்கு இதை ஏன் முதன்மை பரிசோதனையாக எடுத்துக்கொள்வது இல்லை?

இதில் சில குறைபாடுகள் உள்ளன. முதலாவது, ‘பாசிட்டிவ்’ முடிவு வந்த எல்லோருக்கும் கரோனா இருக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது. அதேபோல, ‘நெகட்டிவ்’ முடிவு வந்தவர்களுக்கு தொற்று இல்லை என்றும் கூறமுடியாது.

RT-PCR பரிசோதனை யாருக்கு, எப்போது செய்யப்படுகிறது?

வெளிநாட்டில் இருந்து வந்தவர்களில் கரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு நோய் பாதிப்பின் ஆரம்பத்திலும், நோய் குணமான பிறகும் இந்த பரிசோதனை செய்யப்படுகிறது. இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், கரோனா உள்ளதாக சந்தேகிக்கப்படுபவர்கள் ஆகியோருக்கும் இரண்டு முறை பரிசோதிக்கின்றனர்.

இந்த பரிசோதனையை பொறுத்தவரை, வெளிநாடுகளுக்கும் இந்தியாவுக்கும் என்ன வித்தியாசம்?

அறிகுறி தெரியாதவர்களிடம் இருந்தும் பரவக்கூடியது கரோனா. இதனால், சீனா, தென் கொரியா, ஜெர்மனி போன்ற நாடுகளில் தொற்று பரவும் பகுதிகளில் கரோனா அறிகுறிகள் லேசாகஇருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, வீடு வீடாகத் தேடிச் சென்றுஅனைவருக்கும் இந்த பரிசோதனை செய்தார்கள். நாட்டில் உண்மையான பாதிப்பு தெரிந்தது. ஆரம்பக்கட்டத்திலேயே சிகிச்சைஅளித்து உயிரிழப்பை தடுக்கமுடிந்தது. ‘சமூகப் பரவலை’யும்தடுக்க முடிந்தது. இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால்தான் கரோனாவை அவர்கள் சீக்கிரத்தில் வீழ்த்தினர். இவ்வாறு செய்யாத இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகள் அதிக உயிரிழப்புகளை எதிர்கொள்ள நேர்ந்தது.

கரோனாவை அறிய எளிய பரிசோதனை

ரத்த தட்டணுக்கள் (Platelets) குறைந்தால் டெங்கு இருக்கலாம் என சந்தேகிப்பதுபோல கோவிட்-19 காய்ச்சலுக்கு இந்தியாவில் எளிய பரிசோதனைகள் இல்லையா?

இருக்கின்றன. வழக்கமான ரத்தப் பரிசோதனையில் நிண அணுக்கள் (Lymphocytes), ஹீமோகுளோபின், ஆல்புமின் அளவுகள் மிகவும் குறைவாக இருந்தால், CRP, ALT, AST, LDH, SAA, D-Dimer, Procalcitonin போன்றவற்றின் அளவுகள் மிகவும் கூடுதலாக இருந்தால், நெஞ்சு எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேனில் மார்பின் இரண்டு பக்கங்களிலும் சளி அதிகம் அடைத்திருந்தால் கோவிட்-19 காய்ச்சல் இருப்பதாக சந்தேகம் கொள்ளலாம். அப்போது அவர்களைத் தனிமைப்படுத்தி, சளி மாதிரிகளை RT-PCR பரிசோதனைக்கு அனுப்பி நோயை உறுதிப்படுத்த வேண்டும்.

சீனா, தென் கொரியா போல, நம் நாட்டில் செய்ய முடியாதா?

இந்த பரிசோதனை செய்யத்தேவைப்படும் ‘கிட்’, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி ஆவதால் இப்போதைக்கு கிடைக்க வாய்ப்பு இல்லை. உள்நாட்டிலேயே தரமான ‘கிட்’ தயாரிக்க அனுமதி அளித்து, அவை உற்பத்தி செய்யப்பட்டு சந்தைக்கு வருவதும் தாமதமாகும். அதற்கான நிதி ஆதாரம்,இந்த பரிசோதனைக்கு சிறப்புஅந்தஸ்து பெற்றுள்ள ஆய்வுக்கூடங்கள் எண்ணிக்கை ஆகியவையும் இங்கு குறைவு. கொஞ்சம் ‘கிட்’களே இருப்பதால், உண்மையாக தேவைப்படுவோருக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதில் மருத்துவ ஆய்வு கவுன்சில் கவனமாக உள்ளது. இதனாலேயே, இந்தியாவில் எல்லோருக்கும் இந்த பரிசோதனை செய்யப்படுவது இல்லை.

இந்த அனைத்து சூழலையும் கருத்தில் கொண்டு, கரோனாகிருமியின் சமூகப் பரவலுக்கு வழிவிட்டுவிட கூடாது என்பதற்காகவே நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் நிலைமைகளை புரிந்துகொண்டு, சமூக விலகலுக்கும், தனித்து இருப்பதற்கும் நாம் பழகிக்கொள்வது அவசியம். ஊரடங்கு உத்தரவுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம். தனிமைதான் வலிமை என்பதை புரிந்துசெயல்படுவோம். அடிக்கடி கைகழுவுதலை கடைப்பிடித்து கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெறுவோம்!

கட்டுரையாளர்: பொதுநல மருத்துவர்.

தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x