Published : 05 Apr 2020 07:07 AM
Last Updated : 05 Apr 2020 07:07 AM

கேள்வியும் பதிலும்

கரோனா வைரஸ் தொடர்பான இடர்மிகுந்த சூழலில் வாசகர்கள் பலரும் பலவிதமான பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். இவற்றுக்குத் தீர்வு எங்கே கிடைக்கும் என்ற தடுமாற்றத்தையும் வெளியிட்டபடி இருக்கிறார்கள். அவர்களின் கேள்விகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், நிபுணர்களிடம் கொண்டு சென்று உரிய பதிலைப் பெற்றுத் தர தயாராகிறது ‘இந்து தமிழ் திசை’! இதோ இங்கே அப்படி சில கேள்வி - பதில்கள்...

மனிதர்களை மட்டும்தான் கரோனா வைரஸ் தாக்குமா, அல்லது வீட்டில் வளர்க்கும் நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளையும் தாக்குமா?

மத்திய அரசின் அறிவியல், தொழில்நுட்பத் துறை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் கூறும் பதில்:

பசு மாட்டிடம் பரவும் ‘பொவைன் வைரஸ் டயரியா’ (பிவிடி) நோயானது மனிதன், கோழி போன்ற மற்ற விலங்குகளுக்கு பரவாது. அதுபோல குறிப்பிட்ட விலங்கை தாக்கும் வைரஸ் மற்ற விலங்குகளில் தொற்று நோயை ஏற்படுத்த முடியாது. எனவே, நாவல் கரோனா வைரஸ் தொற்று நாய், பூனை போன்ற விலங்குகளிடம் இருக்காது. அதேநேரம், வீடுகளில் செல்லப் பிராணிகளாக இவற்றை வளர்க்கும்போது, கரோனா நோய் தொற்று உள்ளவரது தும்மல், இருமல் போன்றவற்றில் இருந்து வெளியேறும் திரவத் துளிகள் வழியாக வைரஸ் கிருமிகள் இந்த விலங்குகளின் தோல் பகுதியில் சில காலம் பதிந்திருக்கக்கூடும். அந்த விலங்குகளை தொடும்போது, வைரஸ் கிருமிகள் மீண்டும் நம் மீது தொற்றிக்கொள்ள வாய்ப்பு உண்டு. எனவே, நோய் அறிகுறி உள்ளவர்கள் செல்லப் பிராணிகளிடம் இருந்து விலகி இருப்பது அவசியம். நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளுடன் விளையாடினால் கைகளை நன்கு கழுவ வேண்டும்.

வீட்டில் குடியிருப்பவர்களிடம் உரிமையாளர்கள் வாடகை வசூலிக்கக் கூடாது என்று பிரதமரும், முதல்வரும் கூறியுள்ளனர். இது கருணை அடிப்படையிலான அறிவுரையா, அல்லது கண்டிப்பான உத்தரவா? வீட்டு உரிமையாளர்கள் வாடகை கேட்டால் புகார் அளிக்க முடியுமா?

சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி கூறும் பதில்:

‘‘தற்போதைய அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, வாடகைதாரர்களிடம் வீட்டு உரிமையாளர்கள் ஒரு மாத வாடகை வசூலிக்க வேண்டாம். அதையும் மீறி வாடகை வசூலிப்பதற்காக அவர்களை துன்புறுத்தினாலோ, கட்டாயப்படுத்தி வெளியேற்றினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று முதல்வர் தெரிவித்துள்ளார். ஆனால், இதுகுறித்து கடுமையான விதிமுறைகள் எதுவும் வகுக்கப்படவில்லை. இருப்பினும், வாடகை வீட்டில் இருப்பவர்கள் பாதிக்கப்பட்டால் அதுகுறித்து மாநகராட்சி கட்டுப்பாட்டு அறை எண் (1913), காவல் துறை கட்டுப்பாட்டு அறை (100), கரோனா பாதிப்பு தொடர்பாக தகவல் தெரிவிக்க வேண்டிய எண் (044 - 29510500) ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். அல்லது சென்னை மாவட்ட ஆட்சியரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு (94441 31000) குறுஞ்செய்தி அனுப்பலாம்.

வாசகர்களே…!

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள சூழலில் எதற்கு விதிவிலக்கு உண்டு; என்னென்ன செயல்களில் ஈடுபட அனுமதி கிடைக்கும்; எதனைச் செய்யலாம் அல்லது எதனைச் செய்யக் கூடாது என்பதில் உங்களுக்கும் இதுபோன்ற பல சந்தேகங்கள் இருக்கலாம். உங்கள் சந்தேகங்களை எங்களுக்கு கேள்வியாக அனுப்பினால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அல்லது நிபுணர்களின் பதில்களுடன் பிரசுரம் செய்யப்படும்.

இதுபோன்ற சந்தேகங்களை வாசகர்கள் press.release@hindutamil.co.in என்ற மின்னஞ்சலில் எங்களுக்கு அனுப்பலாம். மேலும் 044-42890002 என்ற ‘உங்கள் குரல்’ எண் வழியாகவும் கேட்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x