Last Updated : 05 Apr, 2020 06:52 AM

 

Published : 05 Apr 2020 06:52 AM
Last Updated : 05 Apr 2020 06:52 AM

கரோனா தடுப்பூசி தயாராவது எப்போது?

உலகமெங்கும் ஆயிரக்கணக்கா னோரைக் காவு வாங்கிவரும் கரோனா வைரஸுக்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணி, தற்போது பல்வேறு நாடுகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தடுப்பூசியைக் கண்டுபிடிக்க குறைந்தது 18 மாதங்கள் ஆகும் என்று கூறியுள்ள உலக சுகாதார நிறுவனம், கரோனா தடுப்பூசியை விலங்குகளின் உடல்களில் செலுத்தி பரிசோதிப்பதற்கு அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து இதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தடுப்பு மருந்தை மனித உடலில் செலுத்தி சோதித்தறியும் பணி, அமெரிக்காவில் மார்ச் மாதத்திலேயே நடந்தேறிவிட்டது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனத்தின் (Commonwealth Scientific and Industrial Research Organisation – CSIRO) ஆய் வாளர்கள் கரோனா தொற்றுக்கு ஆளாகும் வாய்ப்புள்ள ஃபெர்ரட் (Ferret) எனப்படும் சிறு விலங்கின் உடலில் இந்தத் தடுப்பூசியைப் போட்டு சோதனை செய்திருக்கிறார்கள்.

இதற்கிடையே, காசநோயைத் தடுக்க100 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட ‘பாசிலஸ் கால்மெட்–குயெரின்’ (Bacillus Calmette-Guerin - BCG) எனும்தடுப்பூசியை, கரோனா வைரஸுக்கு எதிராக சோதனை செய்து பார்க்கும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டிருக்கிறார்கள். இது, காசநோயைத் தடுப்பதைத் தாண்டியும் நோய் எதிர்ப்பாற்றல் மண்டலத்தின் செயல்பாட்டை அதிகரிக்கும் ஆற்றல் வாய்ந்தது என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கும், முதியோருக்கும் இந்தத் தடுப்பூசியை செலுத்தி சோதனை நடைபெற்று வருகிறது. எனினும், இந்தத் தடுப்பூசி வகைகள் பெரும்பாலும் குழந்தைகளுக்கானவை என்பதால், இவற்றை பெரியவர்கள் பயன்படுத்தத் தொடங்கினால் பெரிய அளவில் பற்றாக்குறை ஏற்பட்டுவிடும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்திருக்கிறார்கள்.

அரசியல் விளையாட்டுகள்

இந்தச் சூழலில், கரோனா வைரஸுக்கான தடுப்பூசியைத் தயாரிப்பதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிக ஆர்வம் காட்டுகிறார். தடுப்பூசிக்கான காப்புரிமை அமெரிக்காவிடம் இருந்தால், உலகம் முழுவதற்குமான அதன் விநியோகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க முடியும் என அவர் நம்புகிறார்.

கரோனா வைரஸுக்கான தடுப்பூசியைத் தயாரிப்பதில் முக்கிய கட்டங்களை எட்டிவிட்டதாக சொல்லப்படும் ‘க்யூர்வேக்’ (CureVac) எனும் ஜெர்மனி நிறுவனத்தை வாங்கிக்கொள்ள அல்லதுதடுப்பூசிக்கான உரிமத்தை வாங்கிக்கொள்ள ட்ரம்ப் தரப்பிலிருந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக வெளியான செய்திகள், இதில் இருக்கும் அரசியலை வெளிச்சம் போட்டுக் காட்டின. மறுபுறம், மற்றொரு ஜெர்மன் நிறுவனமான ‘பயோஎன்டெக்’ (BioNTech) நிறுவனத்தின் பங்குகளை வாங்க ஒரு சீன நிறுவனம் முயன்ற செய்திகள், இதில் நிலவும் கடும் போட்டியை வெளிச்சம் போட்டுக் காட்டின.

உலக விஞ்ஞானிகள் ஆய்வு

கரோனா வைரஸின் மரபணு வரிசைதொடர்பான தகவல்களை உலக நாடுகளுடன் சீனா பகிர்ந்து கொண்ட பிறகு, மனித உடலில் இந்த வைரஸ் எப்படி நுழைகிறது, எப்படி நோய்த் தாக்குதலை ஏற்படுத்துகிறது என்றெல்லாம் உலக விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

தற்போது, உலக நாடுகள் தங்கள் எல்லையை மூடிக்கொண்டாலும், உலகமெங்கும் உள்ள விஞ்ஞானிகள் தங்களுக்கிடையே வலைப்பின்னலை ஏற்படுத்திக்கொண்டு கரோனா வைரஸுக்கு எதிரான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருப்பது நம்பிக்கை தருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x