

சென்னையில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 16,000 ஊழியர்களைக் களமிறக்கி 10 லட்சம் கட்டிடங்களாகப் பிரித்து தினந்தோறும் ஆய்வு செய்ய சென்னை மாநகராட்சி முடிவெடுத்துள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்று உறுதியானவர்களில் தமிழகத்திலேயே சென்னைதான் முதலிடத்தில் உள்ளது. இங்கு 86 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இந்தியாவில் உள்ள நகரங்களில் சென்னையும் முக்கிய இடத்தைப் பெற்றுவிட்டது. இதனால் சென்னையில் நோய்த்தொற்றைத் தடுக்கும் முயற்சியில் சென்னை மாநகராட்சி தீவிரமாக இறங்கியுள்ளது.
இதுகுறித்து உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு பணிகளைச் செயல்படுத்தி வருகிறது. இதில் மிக முக்கியப் பணியான, மாநகரம் முழுமையிலும், அனைத்து வீடுகளிலும் தினந்தோறும் ஆய்வு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சென்னை முழுவதும் பொதுமக்களுக்கு காய்ச்சல், இருமல், மூச்சு விடுவதில் சிரமங்கள் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், அவர்களை சென்னை மாநகராட்சி பெருமக்கள் ஆய்வு செய்வார்கள். அது சாதாரண சளி மற்றும் காய்ச்சலாக இருப்பின் அதற்கான மருத்துவம் மாநகராட்சியின் மூலம் அளிக்கப்படும். மேல் சிகிச்சை தேவைப்படின், பொது சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள அரசு பொது மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். சென்னை மாநகராட்சியால் இப்பணிக்கான செயல் திட்டம் தயாரிக்கப்பட்டு, மாநகரம் முழுவதும் நாளை முதல் செயல்படுத்தப்பட உள்ளது.
இப்பணிக்கு சென்னை மாநகராட்சியின் மொத்த பரப்பளவில் உள்ள சுமார் 10 லட்சம் கட்டிடங்களில், 75-100 கட்டிடங்கள் என்ற வகையில் பகுதிகளாகப். பிரிக்கப்பட்டு, மொத்தம் சுமார் 13,100 கூறுகள் உருவாக்கப்படும்.
இவ்வனைத்துப் பணிகளையும் நேரடியாகக் கண்காணிப்பு செய்ய பெருநகர சென்னை மாநகராட்சியின் 16,000 ஊழியர்கள் களத்தில் பணியாற்ற உள்ளனர். இந்த ஊழியர்கள், 75-100 வீடுகளை நாளை முதல் தினந்தோறும் தொடர்ந்து 90 நாட்களுக்கு இடைவிடாது தொடர் ஆய்வு செய்து, தினமும் அதற்குண்டான பதிவுகளை உரிய முறையில் மேற்கொள்வார்கள்.
இதன் மூலம், பொதுமக்களின் ஆரோக்கியம் 24 மணிநேரமும் கண்காணிக்கும் வகையில் ஒரு அமைப்பினை சென்னை மாநகராட்சி உருவாக்கியுள்ளது. இந்தக் களப்பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு, உரிய பயிற்சி மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு மாதந்தோறும் 15,000 ரூபாய் மதிப்பூதியம் வழங்கப்படும்.
இவ்வாறான பணிகளுக்கு, உரிய பாதுகாப்பும், வருகை புரியும் சென்னை மாநகராட்சியின் களப்பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கிட வேண்டும்”.
இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.