

விவசாயமும், இயற்கையுடன் இணைந்த வாழ்வுமே அமைதியைத் தரும் என்கிறார், உலக அளவிலான இரு தொற்றுநோய் பாதிப்புகளைக் கண்ட 100 வயது விவசாயி சுப்பையன்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் மங்கலம் அருகேயுள்ள சின்னப்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பையன். அந்தக் காலத்திலேயே 6-ம் வகுப்பு வரை படித்துள்ள இவர் பாரம்பரிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது மனைவி பழனியம்மாள், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மகன் பழனிசாமி. இப்போதும் விவசாயப் பணிகளை மேற்பார்வையிடுவது, தென்னந்தோப்புக்கு தண்ணீர் விடுவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வரும் சுப்பையனுக்கு, சில நாட்களுக்கு முன் இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
கோவை ராம்நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, மருத்துவர் எஸ்.கார்த்திக் தலைமையிலான மருத்துவக் குழுவினர் அறுவை சிகிச்சை மூலம் எலும்பு முறிவை சரி செய்தனர்.
1920-ம் ஆண்டுகளில் உலகை உலுக்கிய 'ஸ்பானிஷ் ஃப்ளூ' நோயால் பல கோடி பேர் உயிரிழந்தனர். இந்தியாவிலும் உயிரிழப்புகள் இருந்தன. இந்த காலகட்டத்தைச் சேர்ந்த சுப்பையனின் உறவினர்கள் பலரும் இந்நோயால் உயிரிழந்தனர். அதன் தாக்கம் குறித்து சுப்பையன் அறிந்துள்ளார். அதேபோல, 1956-ல் ஏற்பட்ட காலரா (ஏசியன் ஃப்ளூ) பாதிப்பையும் இவர் பார்த்துள்ளார். தற்போது கரோனா வைரஸ் நோய் பாதிப்புகளையும் அறிந்துள்ள சுப்பையன் 'இந்து தமிழ் திசை' செய்தியாளரிடம் கூறியாதாவது:
"விவசாயம் தான் எங்களது பாரம்பரியத் தொழில். விவசாயமும், இயற்கையுடன் இணைந்த வாழ்வும்தான் அமைதியானது. விவசாயத்துடன், ஆர்.எஸ்.புரம் பகுதியில் சொந்தமாக டையிங், பிரிண்டிங் தொழிலும் செய்தேன். மேலும், மஞ்சள் பை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரித்து உதகை, குன்னுார், கோத்தகிரி மற்றும் கேரளாவுக்கு அனுப்பி வைத்தேன்.
நான் சிறு வயதாக இருந்தபோது, உலக அளவிலான 'ஸ்பானிஷ் ஃப்ளூ' நோயால் உறவினர்கள் பலர் இறந்ததாக பெற்றோர் தெரிவித்தனர். அதற்குப் பிறகு காலரா பரவியபோது, எனது தங்கையைப் பறிகொடுத்தேன். காலராவின்போது ஊரையே காலி செய்துவிட்டு, ஊருக்கு வெளியில் தங்கியிருந்தோம். அந்த காலகட்டத்தில் பல இன்னல்களை சந்தித்துள்ளோம். தற்போது கரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்தும் அறிந்துள்ளேன். இதுபோன்ற பேரிடர்களையெல்லாம் வாழ்வில் கடந்து செல்லத்தான் வேண்டும்.
நான் எப்போதும் எண்ணெயில் பொறித்த பஜ்ஜி, போன்டா போன்றவற்றை சாப்பிட்டதில்லை. உணவுக்கும் செக்கு எண்ணெய்தான் பயன்படுத்துகிறேன். இஞ்சி, மஞ்சள், குருமிளகு இல்லாத உணவுகளை சாப்பிட மாட்டேன். கீழே விழுந்து இடுப்பு எலும்பு உடைவதற்கு முன்பு வரை விவசாயப் பணிகளை பார்த்துக் கொண்டிருந்தேன். என்னால் சும்மா இருக்கவே முடியாது. இவையே எனது உடல் ஆரோக்கியத்துக்குக் காரணம்" இவ்வாறு சுப்பையன் தெரிவித்தார்.