

தேசிய ஊரடங்கு உத்தரவைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு உற்பத்தித் தொழில் முடங்கியுள்ளது. வேலையிழந்து தவிக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரமின்றித் தவித்து வருகின்றனர்.
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தாக்கத்தால் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர்.
இந்தியாவிலும் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வகையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
ஆனாலும், சமுதாய விலகல் என்பதை முழுமையாக பொதுமக்கள் பின்னபற்றாத காரணத்தால் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.
கரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மாதம் 23ம் தேதி முதல் தேசிய ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இதனால் நாட்டில் உள்ள அனைத்துத் தொழில்களும் முடங்கியுள்ளன.
இதில், சிவகாசி பட்டாசுத் தொழிலும் விதிவிலக்கல்ல. தமிழகத்தின் குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சுமார் 1,100 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன.
இத்தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளன.
தற்போது முழு அடைப்பு காரணமாக பட்டாசுத் தொழில் முற்றிலும் முடங்கிப்போய் உள்ளது. வாரக்கூலிகளாகவும் தினக்கூலிகளாகவும் பட்டாசு ஆலைகளில் பணியாற்றி வந்த லட்சக் கணக்கான தொழிலாளர்கள் தற்போது வருமானம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அரசு வழங்கும் ரூ.ஆயிரம் நிவாரணத் தொகை தங்களது குடும்பச் செலவுக்குப் போதவில்லை என்கிறார்கள் பட்டாசுத் தொழிலாளர்கள்.
ஊரடங்கு உத்தரவு மற்றும் தொழில் முடக்கம் காரணமாக தங்களது வாழ்வாதாரமும் முடங்கிப் போய் உள்ளதால் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.ஆயிரமும் அனைத்து வகை பட்டாசுத் தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்றும், அதோடு பட்டாசு உற்பத்தியாளர்களும் விற்பனையாளர்களுக்கும் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்றும் பட்டாசுத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.