

பத்திரிக்கையாளர்களை தாக்கிய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பத்திரிகையாளர்கள் புகார் அளித்தனர்.
நாடாளுமன்ற தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று திமுக பொருளாளர் பதவியை மு.க.ஸ்டாலின் ராஜிநாமா செய்த தாக ஞாயிற்றுக்கிழமை தகவல் பரவியது. இதை கேள்விப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள், ஆழ்வார்பேட் டையில் மு.க.ஸ்டாலின் வீட்டின் முன்பு திரண்டனர். ராஜிநாமாவை வாபஸ் பெற வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.
இதையடுத்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மு.க.ஸ்டாலின் ராஜினாமா விவகாரம் பற்றி பேட்டி அளித்தார். அப்போது, ஸ்டாலின் ராஜிநாமா செய்திருப்பதை மு.க.அழகிரி இது ஒரு நாடகம் என தெரிவித்து இருக்கிறாரே? என டைம்ஸ் நவ் நிருபர் சபீர் அகமது கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு துரைமுருகன் பதில் அளிக்க மறுத்தார். இதனைத் தொடர்ந்து நீங்கள் நாடகம் ஆடுகிறீர்களா? அல்லது அவர் நாடகம் ஆடுகிறாரா? என மீண்டும் கேள்வி எழுப்பினார். இதையடுத்து, பேட்டியை முடித்துவிட்டு துரைமுருகன் வெளியே சென்றுவிட்டார்.
சிறிது நேரத்தில் மு.க.ஸ்டாலின் வீட்டில் இருந்து திமுக தென் சென்னை மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் வெளியே வந்தார். அவரை பேட்டி எடுக்க டைம்ஸ் நவ் நிருபர் சபீர் அகமது மற்றும் புதிய தலைமுறை தொலைக்காட்சி நிருபர் ஆகியோர் சென்றனர். அப்போது, அவர் ஸ்டாலின் தன் னுடைய பதவியை ராஜிநாமா செய்யவில்லை என தெரிவித்து விட்டு சென்றுவிட்டார்.
அப்போது, அங்கிருந்த திமுகவினர் நிருபர் சபீர் அகமது மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். அடி தாங்க முடியாமல் நிருபர் சபீர் அகமது மு.க.ஸ்டாலின் வீட்டுக்குள் ஓடினார். பின்னால் துரத்திச் சென்ற திமுகவினர், அவரை மீண்டும் தாக்க முயன்றனர். இந்த தாக்குதல் சம்பவத்தை போட்டோ எடுக்க முயன்ற புகைப் படக்காரர்களையும் மிரட்டினர். அப்போது, வீட்டில் இருந்து வெளியே வந்த சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் நிருபர் சபீர் அகமதுவை போலீஸ் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வீட்டின் பின்வழியாக அழைத்துச் சென்று சிறிது தூரத்தில் இறக்கிவிட்டார்.
தாக்குதலில் நிருபர் சபீர் அகமது முகத்திலும், வீடியோ கிராபர் நெஞ்சிலும் காயம் ஏற் பட்டது. புதிய தலைமுறை தொலைக்காட்சி நிருபர் கார்த்திகேயனும் காயம் அடைந் தார். கேமராக்கள் மற்றும் வீடியோ கேமராக்களை கீழே போட்டு திமுகவினர் உடைத்து எறிந்தனர். அதன்பின், அங்கு கூடியிருந்த நிருபர்கள் மற்றும் போட்டோகிராபர்களையும் துரத்தினர்.
இதனைத் தொடர்ந்து திமுகவினர் நந்தனம் சேமியர்ஸ் சாலையில் டைம்ஸ் நவ் அலுவலகத்துக்குச் சென்றனர். அங்கிருந்த பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்களை மிரட்டினர். பத்திரிகையாளர்களை தாக்கிய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 100-க்கும் மேற்பட்ட பத்திரிகை யாளர்கள் ஒன்றாகச் சென்று தேனாம்பேட்டை காவல் நிலையம் மற்றும் வேப்பேரியில் உள்ள சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் ஆகியவற்றில் புகார் அளித்தனர்.