

கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் அலுவலகத்தைப் பயன்படுத்த ஆட்சியருக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் ஆட்கொல்லி நோயான கரோனா நோயத் தொற்றைத் தடுக்க அனைத்து நாடுகளும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் மத்திய அரசும் தமிழக அரசும் ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்தி சமூக விலகலை உறுதி செய்துள்ளன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் - கள்ளக்குறிச்சி மாவட்டக் குழுவின் சார்பில், கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு மூலம் ரூ.50 ஆயிரம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று (ஏப்.4) விழுப்புரம் ஆட்சியர் அண்ணாதுரையிடம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.வி.சரவணன் கடிதம் ஒன்றை அளித்தார்.
அக்கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
"கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கும், அறிகுறி உள்ளோரைத் தனிமைப்படுத்திடவும் மேலும் சிகிச்சை வழங்கிடவும் விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் அமைந்துள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்குச் சொந்தமான மாவட்டக் குழு அலுவலகத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
அதற்கு முழுமையான ஒத்துழைப்போடு மாவட்டம் முழுவதும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் அனைத்து விதமான கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் எல்லா நிலைகளிலும் துணை நிற்பார்கள். தன்னார்வ அமைப்புகளோடு கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்களையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்".
இவ்வாறு ஏ.வி.சரவணன் தெரிவித்துள்ளார்.