

திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ்சில் அழைத்துச் செல்லப்பட்டனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 43 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கரோனா தொற்று பாதிப்பில் தமிழகத்திலேயே இரண்டாவது இடத்தில் திண்டுக்கல் மாவட்டம் உள்ளது. கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களின் குடும்பத்தார். அவர்கள் வசிக்கும் பகுதிகள் முற்றிலும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு யாரும் வெளியேற அனுமதிக்கப்படுவதில்லை. இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட 43 பேரையும் அருகிலுள்ள கரூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு இன்று காலை ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் இருந்து அனுப்பிவைத்தனர்.
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மொத்தம் 74 பேர் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 43 பேர் கரோனா உறுதி செய்யப்பட்டது.
மீதமுள்ளவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு கரோனா டெஸ்ட் செய்வதற்காக தேனி மாவட்ட மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான முடிவுகள் அடுத்தடுத்த நாட்களில் வெளியாகும்.
தமிழகத்தில் இரண்டாவது இடத்தில் திண்டுக்கல் மாவட்டம் உள்ள நிலையில் மாவட்டம் முழுவதும் நகரங்கள், கிராமங்கள் துண்டிக்கப்பட்டு அனைத்து பகுதியும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பாதித்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள். அப்பகுதியில் வசித்தவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருகின்றனர்.