

கரோனா வைரஸ் பரிசோதனை மையங்களை போதுமான அளவு உருவாக்க வேண்டும் என்று அரசுக்கு கனிமொழி எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு இன்று காலை மக்களவை உறுப்பினர் கனிமொழி வந்தார்.
அவர் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா வைரஸ் பாதிப்பு சிகிச்சை பிரிவை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தனிமைப்படுத்தப்படுபவர்களுக்கான பிரிவையும் பார்வையிட்டார். மேலும் மருத்துவமனை கண்காணிப்பாளர் கமலவாசனிடம், சிகிச்சைக்குரிய உபகரணங்கள் மற்றும் மருந்துகள் இருப்பு குறித்து கேட்டறிந்தார்.
அப்போது, திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., உறைவிட மருத்துவர் பூவேஸ்வரி மற்றும் செவிலியர்கள் உடனிருந்தனர்.
பின்னர் கனிமொழி எம்பி செய்தியாளர்களிடம் கூறும்போது, "கரோனா வைரஸ் பாதிப்பில் போதுமான அளவு பரிசோதனைகள் நடைபெறவில்லை என பல்வேறு தரப்பிலிருந்து சொல்லக்கூடிய கருத்தாக உள்ளது.
அரசு அதனை கருத்தில் எடுத்துக் கொண்டு போதுமான அளவு பரிசோதனைகளை செய்ய வேண்டும்.
இது மிக முக்கியமான ஒரு விஷயம். கோவில்பட்டி அரசு மருத்துவமனை மற்ற இடங்களிலும் காட்டிலும் சிறப்பான தயார் நிலையில் இருப்பதை பார்க்கும்போது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.
இதேபோல் அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவர்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும்" என்றார்.