

கரோனா பாதிப்பால் மேலும் ஒருவர் விழுப்புரத்தில் உயிரிழந்ததாக எழுந்த கேள்விக்கு அரசு அதுபற்றி அறிவிக்கும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சென்னை ராயப்பேட்டையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:
“ராயப்பேட்டையில் இன்று கிருமிநாசினி தெளிக்கும் பணி நடந்து வருகிறது. தமிழகத்தில் 4,500 இடங்களில் கிருமிநாசினி தெளிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. , 17 இடங்களில் ஆய்வகங்கள் உள்ளன. கூடிய விரைவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கிருமி நீக்க நடவடிக்கை எங்கெல்லாம் தேவைப்படுகிறதோ அங்கு செய்வோம். தயாரிப்பு, முன் தடுப்பு நடவடிக்கை அனைத்தையும் செய்து வருகிறோம். தடுப்பு நடவடிக்கையாக அனைத்துத் துறைகளையும் சேர்த்து நடவடிக்கை எடுத்துவருகிறோம். விழுப்புரம் 2-வது பலி ஏற்பட்டுள்ளதா என்பதைப் பற்றி அரசு முறைப்படி தெரிவிக்கும்”.
இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்த 51 வயது நபர் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடுநிலைப்பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய அவர் உயிரிழப்புக்கு கரோனா வைரஸ் காரணமா அல்லது வேறு காரணமா என்பது அரசு அறிவித்த பிறகே உறுதியாகும்.