முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி: ஓபிஎஸ்-ஈபிஎஸ் அறிவிப்பு

முதல்வர் பழனிசாமி - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: கோப்புப்படம்
முதல்வர் பழனிசாமி - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: கோப்புப்படம்
Updated on
1 min read

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படுகிறது என, அதன் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப்.4) கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், "அதிமுகவின் சார்பில் கரோனா நோய்த் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.

தமிழக மக்களுக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவும், நோயுற்றோருக்கு சிகிச்சையும், நிவாரணமும் அளிப்பதற்காகவும் அதிமுக அரசு இரவு, பகல் பாராமல் சுற்றிச் சுழன்று சிறப்பாக பணியாற்றி வரும் இந்த நேரத்தில், அரசின் கோரிக்கையை முழு மனதோடு ஏற்று, கரோனா நோய்த்தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு என முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அதிமுகவின் சார்பில் 1 கோடி ரூபாய் வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இயற்கை பேரிடர் ஏற்பட்ட நேரங்களில் எல்லாம் மக்களின் தேவைகளை அறிந்து கண்ணும், கருத்துமாக விரைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அதிமுகவும், தமிழக அரசும் கரோனா நோய்த்தொற்று பேரிடரில் இருந்து மக்களைக் காப்பாற்றவும், மக்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகளையும், ஊரடங்கால் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழலில் மக்களுக்கு உரிய பணிகளை ஆற்றவும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. பல நிலைகளிலும், வடிவங்களிலும் இப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், அதிமுக நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆகியோர் தங்களது ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளிப்பார்கள் எனவும், கரோனா நோய்த்தடுப்பு மற்றும் மருத்துவ வசதிகளை அளிப்பதற்கான சிறப்பு நிதிக்கு, அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா 1 கோடி ரூபாயையும், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா 25 லட்சம் ரூபாயையும் வழங்குவார்கள் எனவும் அதிமுகவின் சார்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக தொண்டர்கள் தங்களால் இயன்ற உதவிகளையும், நிவாரணப் பணிகளையும் மக்களுக்குச் செய்து வருகின்றனர். அதிமுக நிறுவனத் தலைவர் எம்ஜிஆர், அதிமுக நிரந்தரப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆகியோர் காட்டிய பாதையில் மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்ற உணர்வோடு அதிமுக பணிகளும், மக்கள் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன" எனத் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in