

குஜராத்தில் இட ஒதுக்கீடு கோரி படேல் சமூகத்தினர் நடத்தி வரும் போராட்டம் நாடு முழுவதும் மீண்டும் இட ஒதுக்கீடு குறித்த விவாதத்தை கிளப்பியுள்ளது.
குஜராத்தில் படேல் சமூகத்தினரின் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த விஸ்வ இந்து பரிஷத் (வி.எச்.பி.) அகில இந்திய செயலாளர் சுரேந்திரா ஜெயின், ''ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே எங்கள் நீண்ட கால கோரிக்கை. தற்போது அதற்கான நேரம் வந்து விட்டது'' என தெரிவித்திருந்தார்.
இதனை வி.எச்.பியின் அகில இந்திய இணைச் செயலாளர் எஸ்.கோபாலரத்தினம் உறுதிப் படுத்தியுள்ளார். இது குறித்து ‘தி இந்து'விடம் அவர் கூறியதாவது:
படேல் சமூகத்தினரின் இட ஒதுக் கீடு போராட்டத்தில் நியாயம் இருப்பதாக தெரியவில்லை. அரசியல் சட்டம் உருவானபோது குறிப்பட்ட காலத்துக்கு மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இட ஒதுக்கீட்டினால் ஒரு குறிப்பிட்ட சமூகம் எந்த அளவுக்கு முன்னேறி யுள்ளது என்பதை கணக்கிட்டு இட ஒதுக்கீட்டை படிப்படியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றார்.
இது குறித்து பாஜக, ஆர்.எஸ்.எஸ்., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திராவிடர் கழகம் ஆகியவற்றின் தலைவர்கள் ‘தி இந்து'விடம் கூறியதாவது:
பாஜக மூத்த தலைவர் இல.கணேசன்:
பாஜக இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கட்சியல்ல. ஆனால், எந்தெந்த சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய தனி ஆணையம் அமைக்கலாம். படேல் சமூகத்தினரின் போராட்டங்களால் பாஜகவுக்கு பாதிப்பு ஏற்படாது. ஏனெனில் பாஜகவில் படேல் சமூகத் தினர் அதிக அளவில் உள்ளனர். எனவே, அவர்களின் எண்ண ஓட்டங் களை நாங்கள் நன்கறிவோம். இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடைபெறுவது ஒன்றும் புதிதல்ல.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி:
பாஜக தலைவர் அமித்ஷா தமிழகத்துக்கு வந்து இட ஒதுக்கீட்டுக்கு எதிராக குரல் கொடுத்தார். ஆனால், அவரது சொந்த மாநிலமான குஜராத்திலேயே இட ஒதுக்கீடு கோரி மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடித்துள்ளது. 1980-ல் குஜராத்தில் இட ஒதுக்கீட்டை எதிர்த்து போராட்டம் நடத்திய படேல் சமூகத்தினர் இன்று இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்துகின்றனர். மகாத்மா காந்தி பிறந்த குஜராத்துக்கு பெரியாரின் சமூக நீதிக் கொள்கைகள் சென் றுள்ளதையே படேல் சமூகத்தினரின் போராட்டம் உணர்த்துகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்:
மதுரையில் தேவேந்திரகுல வேளா ளர் மாநாட்டில் பேசிய பாஜக தலை வர் அமித்ஷா இட ஒதுக்கீட்டுக்கு எதிராக பேசினார். வி.பி.சிங் மண் டல் கமிஷன் பரிந்துரைகளை அமல் படுத்த நடவடிக்கை எடுத்தபோது பாஜக, ஆர்.எஸ்.எஸ். எதிர்த்து கிளர்ச்சி செய்தன. பாஜக, ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் இட ஒதுக்கீட்டுக்கு எதிராகவே செயல்பட்டு வருகின்றன. இந்த உண்மையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தாழ்த் தப்பட்டோர், பழங்குடியினர், பிற் படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கூடாது என்று சொல்வது கடும் கண்டனத்துக்குரியது.
ஆர்.எஸ்.எஸ். மாநில செய்தித் தொடர்பாளர் என்.சடகோபன்:
தாழ்த் தப்பட்டோர், பழங்குடியினர் உள் ளிட்ட ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ்ஸின் நிலைப்பாடாகும். அதேநேரத்தில் இட ஒதுக்கீட்டில் காலத்துக்கு ஏற்ப மாறுதல்களை செய்ய வேண்டும்.
பாஜக இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கட்சியல்ல. ஆனால், எந்தெந்த சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய தனி ஆணையம் அமைக்கலாம்.