Published : 04 Apr 2020 11:44 AM
Last Updated : 04 Apr 2020 11:44 AM

மலிவான விளம்பர அரசியலைத் தவிருங்கள்; கரோனா ஒழிப்பில் தீவிரம் காட்டுங்கள்: பிரதமர் மீது கே.எஸ்.அழகிரி விமர்சனம்

கே.எஸ்.அழகிரி - பிரதமர் மோடி: கோப்புப்படம்

சென்னை

இனியாவது கரோனா ஒழிப்பில் தீவிரம் காட்டுங்கள் என, பிரதமர் மோடியை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (ஏப்.4) வெளியிட்ட அறிக்கையில், "மத்திய பாஜக ஆட்சியில் பிரதமர் மோடி எடுக்கும் முடிவுகள் ஜனநாயக உணர்வோடு கலந்தாலோசனை செய்யாமல் தன்னிச்சையாக எடுக்கப்பட்டு வருவதால் பல்வேறு துன்பங்களை மக்கள் அனுபவித்து வருகிறார்கள்.

இதற்கு பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி ஆகியவை சான்றுகளாகும். இந்தியாவை அச்சுறுத்தி வரும் கரோனா நோயை எதிர்த்து பிரதமர் மோடி எடுக்கும் நடவடிக்கைகள் கடும் சர்ச்சைக்கு உள்ளாகி வருகின்றன.

கரோனா தொற்றுநோய் காரணமாக அண்டை நாடான சீனா கடுமையான பாதிப்பை டிசம்பர் மாதம் முதல் சந்தித்துக்கொண்டு வந்தது. ஜனவரி 30 ஆம் தேதி உலக சுகாதார நிறுவனம் கரோனா நோய் குறித்து சர்வதேச நெருக்கடி நிலையை அறிவித்தது.

பிப்ரவரி 29 ஆம் தேதி வரை சீனாவில் 3,150 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இச்சூழலில்தான் பிப்ரவரி 24 ஆம் தேதி அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு அகமதாபாத் விளையாட்டு அரங்கில் ஒரு லட்சம் மக்களைத் திரட்டி பிரதமர் மோடி கோலாகலமான முறையில் வரவேற்பு கொடுத்தார்.

சீனாவில் கரோனாவினால் ஏற்படுகிற உயிரிழப்புகள் குறித்து அவருக்கு அப்போது எந்தக் கவலையும் இல்லை. ஆனால் ஜனவரி 30 ஆம் தேதியே கேரளாவில் முதல் கரோனா தொற்று நோய் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு தொடர் பாதிப்புகள் காரணமாக மார்ச் 19 ஆம் தேதி தான் விமான நிலையங்களை மூடுவதற்கான அறிவிப்பை மோடி வெளியிட்டார்.

கடந்த மார்ச் 24 ஆம் தேதி மக்கள் ஊரடங்கை அறிவித்தார். 136 கோடி மக்கள்தொகை கொண்ட நாட்டில் மக்கள் ஊரடங்கை எந்த முன்னேற்பாடும் இல்லாமல் தன்னிச்சையாக அறிவித்ததின் விளைவைத்தான் இன்று நாட்டு மக்கள் அனுபவித்து வருகிறார்கள்.

தொற்றுநோய் ஒழிப்பில் தங்களை அர்ப்பணித்துக்கொண்டு இருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்களை ஊக்கப்படுத்த நாட்டுமக்கள் கைதட்டி உற்சாகப்படுத்த வேண்டும் என்று மோடி கேட்டுக்கொண்டார். இதற்கு மக்களும் கைதட்டி ஆதரவு தெரிவித்தார்கள்.

தற்போது மீண்டும் ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் விளக்கை அணைத்துவிட்டு மெழுகுவர்த்தியில் ஒளியை ஏற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். இப்படிச் செய்வதன் மூலமாக கரோனா நோய் ஒழிப்புக்கு எந்த வகையில் உதவப்போகிறது?

கரோனா நோய் ஒழிப்புக்குத் தேவையான பரிசோதனை மையங்கள், சுவாசக் கருவிகள், முகக்கவசங்கள் பற்றாக்குறையால் நாட்டு மக்கள் தத்தளித்துக்கொண்டு இருக்கிறபோது மெழுகுவர்த்தியை ஏற்றுவதனால் என்ன பயன் ஏற்படப் போகிறது?

கோமாளித்தனத்தை யாராவது செய்தால் சகித்துக்கொள்ளலாம். நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரே செய்யும்போது அதை எப்படி சகித்துக்கொள்வது?

மாநில முதல்வருடன் கலந்து பேசாமல் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிப்பை பிரதமர் மோடி அறிவித்த நான்கு மணிநேரத்தில் நடைமுறைக்கு வந்தது. இதனால் லட்சக்கணக்கான அமைப்புசாரா தொழிலாளர்கள் இடம்பெயர்ந்து சொந்த ஊருக்குச் செல்லக்கூடிய நிலை ஏற்பட்டது.

இவர்களை அந்த மாநிலத்திலேயே இருக்க வைத்து தங்குமிடம் மற்றும் உணவு உள்ளிட்ட வசதிகளை மாநில அரசுகள் மூலமாக மத்திய அரசு செய்திருந்தால் அவர்கள் வெளியூர்களுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.

இந்நிலையில், ரயில், பேருந்து போக்குவரத்து வசதிகள் ரத்து செய்யப்பட்டதால் நூற்றுக்கணக்கான மைல்கள் நடைபயணமாகவே தங்களது ஊருக்குச் செல்ல வேண்டிய பரிதாபநிலை ஏற்பட்டது.

நாடு முழுவதும் 30 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இடம்பெயர்கிற நிலை ஏற்பட்டது. சென்னையில் இருந்து மட்டும் 2 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் தமிழக அரசு ஏற்பாடு செய்த பேருந்துகளில் தங்கள் கிராமங்களுக்குச் சென்றுள்ளனர்.

சமூக விலகல், தனிமைப்படுத்துதல் பற்றி பிரதமர் மோடி அறிவுரை கூறினாரே ஒழிய அதற்கு நேர் எதிராக அவரது நடவடிக்கைகள் அமைந்ததால் லட்சக்கணக்கில் இடம் பெயர்ந்தவர்கள் மூலமாக நாட்டு மக்களிடையே கரோனா தொற்றுநோய் படருவதற்கான ஒரு பேராபத்து இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது.

சீனாவில் வூஹான் நகரத்தில் கரோனா பாதிக்கப்பட்டபோது அந்த நகரத்தின் எல்லைகள் மூடப்பட்டு யாரும் உள்ளே வரவோ, வெளியே செல்லவோ முடியாத அளவில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதுபோன்ற ஒரு நடவடிக்கையை தலைநகர் டெல்லி உள்ளிட்ட சில நகரங்களில் எடுத்திருந்தால் லட்சக்கணக்கான இடம் பெயரலையும், கரோனா நோய் பரவலையும் தடுத்திருக்க முடியும்.

இந்த சூழலில் போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலையில் மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் இருந்து நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தை நோக்கி சில நண்பர்களுடன் நடைபயணமாக வந்த 21 வயது நிரம்பிய மாணவர் லோகேஷ் பாலசுப்ரமணியன் செகந்தராபாத் நகரத்திற்கு வந்தபோது மயங்கி கீழே விழுந்திருக்கிறார்.

அவரை[ பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக கூறப்பட்டு, அவரது சடலம் பள்ளிபாளையத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறது. எந்தத் தவறையும் செய்யாத லோகேஷ் பாலசுப்ரமணியம் இறப்புக்கு யார் பொறுப்பு? இதற்கான பொறுப்பை பிரதமர் மோடி ஏற்றுக்கொள்வாரா?

இத்தகைய கொடூர சம்பவங்கள் நடப்பதற்கு பிரதமர் மோடியின் ஆட்சிதான் காரணம் என்று குற்றம் சாட்ட விரும்புகிறேன். இந்த உயிரிழப்பு ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாகக் குறிப்பிட விரும்புகிறேன்.

எனவே, பிரதமர் மோடி, போதும் இழப்பு. இனியாவது கரோனா ஒழிப்பில் தீவிரம் காட்டுங்கள். மலிவான விளம்பர அரசியலைத் தவிர்த்து ஆரோக்கியமான உரிய நடவடிக்கைகளை எடுத்து மக்களைக் காப்பாற்ற முன்வாருங்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன்" என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x