

கரோனா பாதிப்புக்கு பிறகு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் மக்களின் பொருளாதார ரீதியான பாதிப்பால் வாங்கும் சக்தி குறையும் என்பதால் ஜவுளித்தொழிலில் உற்பத்தி குறைந்து பாதிப்பு ஏற்படும் என தமிழ்நாடு ஸ்பின்னிங் மில்ஸ் அசோசியேஷன் முதன்மை ஆலோசகர் கே.வெங்கடாச்சலம் தெரிவித்தார்.
இந்து தமிழ் திசை செய்தியாளரிடம் அவர் கூறியதாவது:
கரோனா பாதிப்பு முதற்கட்டமாக அனைத்து தொழிலாளர்களையும் வேலையிழக்கச்செய்துள்ளது. சிறிய அளவில் ஜவுளித்தொழில் செய்துவந்த முதலாளிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஊரடங்கு முடிவுக்கு வரும் நாளில் இருந்து தொழிலை தொடங்க, ஊர்களுக்கு சென்ற தொழிலாளர்களை ஒன்றிணைப்பது, தேவையான மூலப்பொருட்களை கொண்டுவருவது என ஒன்றரை மாதம் ஆகிவிடும்.
தொழில் தொடங்கிவிட்டால் தொழிலாளர்களுக்கு எந்தபாதிப்பும் ஏற்படாது. மக்களின் பொருளாதாரநிலையை பொறுத்தே ஜவுளித்தொழில் உள்ளது.
கரோனா பாதிப்பு நடவடிக்கையால் மக்களின் வாங்கும் சக்தி குறையும் என்பதால் ஜவுளி உற்பத்தி குறையும். மக்களின் பொருளாதாரம் மேம்பட்டால் தான் உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
எனவே கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டாலும் ஜவுளித்தொழில் மீள சில மாதங்கள் ஆகும். ஏற்கனவே அரசின் செயல்பாடுகளால்
ஜவுளித்தொழில் பல்வேறு இன்னல்களை சந்தித்துவரும் நிலையில் கரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கை மேலும் இந்ததொழிலை சிரமத்திற்குள்ளாகியுள்ளது. இதனால் தொழிலாளர்கள் மட்டுமல்ல தொழில் நடத்துபவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர், என்றார்.