

கரோனா தொற்று குறித்த அச்சம், சக மனிதர்களிடமிருந்து விலகியிருக்கச் செய்திருக்கும் நிலையில், மறுபக்கம் மனிதாபிமானத்தைப் பறைசாற்றும் வகையிலான நிகழ்வுகள் ஆறுதல் தருகின்றன.
ஆம், பரோலில் விடுவிக்கப்பட்ட சிறைவாசியை அரவணைத்து அத்தகைய மனிதாபிமானத்தைப் பறைசாற்றி இருக்கிறது கோவையில் உள்ள ஆதரவற்றோர் மறுவாழ்வு இல்லம்.
மத்திய சிறைச்சாலைகளில் கரோனா வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் விசாரணைக் கைதிகளைப் பரோலில் விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதையடுத்து, தமிழகத்தின் சிறைகளில் உள்ள விசாரணைக் கைதிகள் பலர் மார்ச் 24-ம் தேதி முதலே பரோலில் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். கோவை மத்திய சிறையில் கடந்த வாரம் 5 பெண் கைதிகள் உட்பட 136 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் ராஜ்குமார்.
கள்ளக்குறிச்சியைச்சேர்ந்த அவர், முன்கூட்டியே சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதாலும், இரவு நேரத்தில் வாகனம் ஏதும் இல்லாததாலும் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் திண்டாடியிருக்கிறார். இது தொடர்பாக கோவை ஆட்சியரிடம் முறையிட வந்த ராஜ்குமாருக்கு ஒரு சமூக சேவகரின் அறிமுகம் கிடைத்திருக்கிறது. அவரிடம் விஷயத்தைச் சொல்லியிருக்கிறார் ராஜ்குமார். இதையடுத்து, கோவை மாநகராட்சி சார்பில் ஆர்.எஸ்.புரத்தில் இயங்கிவரும் இல்லத்தின் இரவு நேரத் தங்கும் விடுதிக்கு ராஜ்குமாரை அழைத்துவந்திருக்கிறார் அந்தச் சமூக சேவகர்.
இந்த விடுதியில் சிறைவாசிகள் அல்லது சிறை மீண்டோர் யாரையும் இதுவரை தங்க வைத்ததில்லை. இருந்தாலும் ஆபத்துக்குப் பாவமில்லை என நினைத்த விடுதிக் காப்பாளர் கங்காதரன், மாநகராட்சி அதிகாரிகளை போனில் அழைத்து அதற்கு அனுமதி கோரியிருக்கிறார். ராஜ்குமாரின் உறவினர்களிடம் தொலைபேசி எண்ணை வாங்கி அவர்களுக்கும் தகவல் சொல்லியிருக்கிறார். “உடனே வருவதற்கு எங்களிடம் வாகன வசதியில்லை, ஊரடங்கு உத்தரவு வேறு உள்ளது. எப்படியும் இரண்டொரு நாளில் வந்து அழைத்துச் செல்கிறோம். அதுவரை அங்கேயே தங்க வையுங்கள்” என உறவினர்கள் கோரியிருக்கின்றனர். எனவே ராஜ்குமாரை முறைப்படி இல்ல உறுப்பினராகப் பதிவு செய்து இல்லத்தில் தங்க வைத்திருக்கிறார் கங்காதரன்.
இந்த இல்லத்தில் தற்போது 100 பேர் உள்ளனர். காலை கஞ்சி மற்றும் இட்லி, மதியம் சாப்பாடு, இரவு தக்காளி சாதம் எனத் தருகின்றனர். தவிர கரோனா எதிரொலியால் இல்லம் முழுக்க கிருமி நாசினி அடிக்கப்பட்டு, கட்டில்கள் 6 அடி இடைவெளி விட்டு போடப்பட்டு சமூக விலக்கமும் கடைப்பிடிக்கப்படுகிறது.
சிறையிலிருந்து வந்தவர் என்பதால், இங்குள்ளவர்களுடன் பழக ராஜ்குமார் முதலில் சங்கோஜப்பட்டிருக்கிறார். இங்கே தங்கிப் பார்த்த பின்பு, சொந்த பந்தங்களைப் பிரிந்து வாழும் சோகம், வயோதிகம் தரும் வலிகள் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களின் கதைகளைக் கேட்டு நெகிழ்ந்து அவர்களுடன் அன்புடன் பழக ஆரம்பித்துவிட்டார்.
தனக்கு ஊரில் விவசாயத் தோட்டங்கள் இருப்பதாகவும், மக்காச்சோளம், மஞ்சள், காய்கறிகள் எல்லாம் விளைவதாகவும், ஊருக்குப் போனதும் தன்னால் இயன்ற பொருளுதவிகளை இந்த இல்லத்துக்குச் செய்வதாகவும் சொல்லியிருக்கிறார்.
இதற்கிடையே, அரசு அலுவலர்களுடன் பேசி ஒரு ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்துகொண்ட ராஜ்குமாரின் உறவினர்கள், இந்த இல்லத்துக்கு வந்து அவரை அழைத்துச் சென்றுவிட்டனர். அவரை முறைப்படி அனுப்பி வைத்த விடுதிக் காப்பாளர் கங்காதரன் பேசும்போது, “ராஜ்குமார் ஏதோ சின்ன வழக்கு ஒன்றில் சிறையில் இருந்திருக்கிறார். இங்கே வந்த இரண்டு நாட்களில் இல்லவாசிகளிடம் நெருக்கமாகப் பழகினார். இப்படியான அனுபவம் எங்களுக்கே புதுசு. இப்படி போக்கிடம் இல்லாமல் யார் எந்த நேரத்தில் வந்தாலும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். எனவே யார் வேண்டுமானாலும் தகவல் சொல்லலாம்” என்று சொன்னார்.
கரோனா வைரஸ் எத்தனைதான் உயிர் பயம் காட்டினாலும், கருணை உள்ளங்கள் மனிதத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கவே செய்யும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஓர் உதாரணமாகியிருக்கிறது!