Published : 04 Apr 2020 09:55 AM
Last Updated : 04 Apr 2020 09:55 AM

ஈரோடு பேருந்து நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கும் சுரங்கப்பாதை அமைப்பு

கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஈரோடு பேருந்து நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கும் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கரோனா நோயைத் தடுக்கும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர், எம்எல்ஏக்கள், மாவட்ட எஸ்.பி., அரசு அதிகாரிகள் உட்பட பலர் கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. ஈரோடு பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் தற்காலிக பெரிய மார்க்கெட் பகுதியில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் காய்கறி வாங்க வருகிறார்கள்.

ஈரோடு பேருந்து நிலையத்தில் காய்கறி வாங்க வரும் பொதுமக்களுக்கு பயன்படும் வகையிலும், கரோனாவில் இருந்து காத்துக் கொள்ளும் வகையிலும் ஈரோடு மாநகராட்சி மற்றும் தன்னார்வ அமைப்புகள் இணைந்து ஈரோடு பேருந்து நிலைய பகுதியான மேட்டூர் ரோடு நுழைவாயில் பகுதி மற்றும் சக்தி ரோடு என இரண்டு இடங்களில் கிருமி நாசினி சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

நோய்த் தொற்றைத் தடுக்கும் வகையில் கிருமி நாசினி சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க விழா இன்று (ஏப்.3) காலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் கதிரவன்,கே.எஸ்.தென்னரசு எம்எல்ஏ ஆகியோர் கலந்துகொண்டு கிருமி நாசினி தெளித்து புதிய சுரங்கப் பாதையை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தனர்.

இந்த சுரங்கப்பாதை வழியாக செல்லும் பொதுமக்கள் தங்களது இரண்டு கைகளும் மேலே தூக்கியவாறு செல்ல வேண்டும். இதன் மூலம் நோய்த்தொற்று தடுக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதேபோன்று கிருமி நாசினி தெளிக்கும் சுரங்கப்பாதை ஒன்றை தற்போது உழவர் சந்தையாக செயல்பட்டு வரும் ஈரோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முன்பு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து கிழக்கு தொகுதி எம்எல்ஏ தென்னரசு கூறியதாவது:

"கரோனா நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் பொதுமக்களின் நலனைக் கொண்டு இந்த கிருமி நாசனி சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் காலை நேரங்களில் அதிக அளவில் பொதுமக்கள் காய்கறி வாங்க வருகின்றனர்.

ஆகவே, பேருந்து நிலைய நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள கிருமி நாசினி பாதையின் மூலம் சென்று வெளியேறும்போது கிருமிகள் தடுக்கப்படுகிறது. மேலும், பேருந்து நிலையத்தின் முன்புறம் கைகழுவுதல் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்டங்களை குறைக்கும் வகையில் நடமாடும் காய்கறி வண்டிகளை ஏற்பாடு செய்து பல பகுதிகளுக்கு இதுவரை 30-க்கும் மேற்பட்ட வண்டிகள் அனுப்பப்பட்டுள்ளன" என்றார் .

முன்னதாக கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதல்வர் பொது நிவாரண நிதியுதவியாக ரூ.25 லட்சத்துக்கான காசோலையை கே.எஸ்.தென்னரசு எம்எம்ஏ தனது கிழக்கு சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாவட்ட ஆட்சியர் கதிரவனிடம் வழங்கினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x